tamilnadu

img

மக்கள் விரோத பாசிச பாஜக ஆட்சியை தூக்கியெறிவோம்... சென்னை ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் முழக்கம்....

சென்னை:
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி கொள்ளை யனே வெளியேறு என்ற முழக்கத்துடனும், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்ட மசோதா 2021ஐ கைவிட வலியுறுத்தியும், தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதைக் கண்டித்தும் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போராட்டங்கள் திங்களன்று (ஆக. 9) நடைபெற்றன.

அதன் ஒருபகுதியாக சென்னை சேப்பக்கம் விருந்தினர் மாளிகை அருகே அனைத்து தொழிற்சங்கங் களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், ஜனநாயக அமைப்புகள் எதுவும் செயல்படமுடியாத அளவிற்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களுடைய, எல்லா தொழிற்சங்க, விவசாயிகள் சங்கத் தலைவர்களுடைய, நீதிபதிகளுடைய, பத்திரிகையாளர் களுடைய, யாரெல்லாம் அரசின் குற்றம், குறைகளை எடுத்துக் கூறுகிறார்களோ அவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டு கேட்பதற்காக ஒரு அயல்நாட்டு நிறுவனத்திடம் இருந்து ஒரு செயலியை வாங்கி பயன்படுத்தும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு என்று கூறுங்கள் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புகிறார்கள். அதுகுறித்து வாய்திறக்கஒன்றிய அரசும், மோடியும் தயாராகஇல்லை. காரணம் அப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டதே இவர்கள்தான். எனவேதான் பதுங்குகிறார்கள். எதிர்க்கட்சிகளின் ஜனநாயகநடவடிக்கைகளை ஒன்றிய அரசு முடக்குகிறது. நாடாளுமன்ற த்தையே கேலிக் கூத்தாக்கிய மோடி அவருடைய கைக்கூலிகள் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவதாக கூறுகிறார்கள். நாடாளுமன்றம் செயல்படாமல் போனால், நீதிமன்றங்கள் அவர்களின் கைப்பாவையாக மாறிப் போனால், சிபிஐ உள்ளிட்ட அமலாக்கத்துறை எல்லாம் அவர்களின் கூண்டுக்கிளியைப் போல் மாறிப்போனால் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை என்னவாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.

அரசு அமைத்த சுவாமிநாதன் கமிட்டி அளித்த பரிந்துரையை அரசுஅமல்படுத்த மறுக்கிறது. மாறாக விவசாயிகளின் விளை நிலங்களை எல்லாம் அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடிய சதி வேலையை ஒன்றிய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கக் கூடிய வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் செய்துள்ளனர். சங்கம் சேரும் உரிமையும், கூட்டுபேர உரிமையும் அனைத்து இடங்களிலும் மறுக்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் சட்டங்களை மோடி அரசுதிருத்தி அமைக்கிறது. எல்லாவகைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மோடி அரசு முடக்கப்பார்க்கிறது. அதன்மூலம் பெருமுத லாளிகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொள்ளை லாபம் அடிக்க வழிவகை செய்து கொடுக்கிறது மோடி அரசு. மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தின் மூலம் அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்.  இந்த சட்டங்களுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஜன நாயகத்தை காப்பதற்கான இந்தப் போராட்டத்தை மேலும் மேலும் முன்னெடுப்போம் என்றார்.                

நடராஜன்
தொமுச நடராஜன் பேசுகை யில், பொதுத்துறை நிறுவனங்கள் மீது தாக்குதல், இன்சூரன்ஸ், வங்கிகள் மீது தாக்குதல், 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகள் மீது தாக்குதல், மின்சார சட்ட மசோதாவை கொண்டு வந்து மின் ஊழியர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல், மீன்வள மசோதாவை கொண்டு வந்து மீனவர்களுக்கு எதிரான தாக்குதல், அமைப்புசாரா நலவாரியம் முடக்கம், மோட்டார் வாகன சட்ட திருத்தம் என எந்த துறையையும் மோடி அரசு விட்டு வைக்கவில்லை. அனைத்தையும் அம்பானி, அதானிகளுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இந்த அரசுக்கு எதிராகதொழிற்சங்கங்கள் மட்டும் போராடினால் போதாது, பொதுமக்களை யும் திரட்ட வேண்டும். பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.  

ராஜாஸ்ரீதர்
எச்.எம்.எஸ். ராஜா ஸ்ரீதர் பேசுகையில், முந்தைய ஆட்சியாளர்களால் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் மோடி ஆட்சியில் அனைத்தும் மூடப்படுகின்றன, தனியார்மயமாகின்றன. எனவே இந்த அரசுக்கு எதிரான போரட்டத்தை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி பேசுகையில், 150 ஆண்டுகாலம் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. படிப்படியாக அனைத்து மாநில உரிமைகளையும் பறித்து மாநில அரசுகளை பஞ்சாயத்து போர்டு போல் மாற்றி வருகிறார்கள். 40 கோடி தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடினால் மோடி ஆட்சியை வீழ்த்த முடியும். அப்படிப்பட்டபோராட்டங்களை முன்னெடுப் போம் என்றார்.

பெ.சண்முகம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த 8 மாதகாலமாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஒரு புதியவரலாற்றை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரு முதலாளி களை தவிர விவசாயிகள், தொழிலாளர்கள், ஆதிவாசி மக்கள், சிறுபான்மையின மக்கள், சிறு குறுஉற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சியை அகற்றுகின்ற வரை அனைத்து பிரிவு மக்களும் ஒன்றிணைந்து வலிமைமிக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியை விட்டு மோடியை அகற்றவில்லை என்றால் பெரும் பணக்காரர்களை தவிர வேறு யாரும் வாழ முடியாது. இந்திய மக்களிடத்திலே கோபக் கனலை உருவாக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

சாதி, மதம், மொழி கடந்து எப்படி தில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்களோ அதுபோல் நாடு முழுவதும் இந்த அரசுக்கு எதிராக மக்களை திரட்டவேண்டும். அதன்மூலம் பாசிச பாஜகஆட்சிக்கு முடிவுகட்ட சபத மேற்போம் என்றார்.அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் எச்.வெங்கடாசலம் பேசுகையில், சாதாரண ஏழை மக்களின் 135 லட்சம் கோடி ரூபாய் நம் நாட்டு வங்கிகளில் உள்ளது. இதை தனியாரிடம் வழங்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. அதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராடி வருகிறார்கள். உங்களுடைய இந்ததேசபக்த போராட்டத்திற்கு வங்கி ஊழியர்களின் ஆதரவு உண்டு. அனைத்து போராட்டங்களிலும் வங்கி ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்றார். இதில் ஜி.சுகுமாறன் (சிஐடியு), சேகர் (ஐஎன்டியுசி), ஏ.அந்தரிதாஸ் (எம்எல்எப்), ஆர்.சம்பத் (டபிள்யுபிடியுசி), வி.சிவக்குமார் (ஏஐயுடியுசி), முனுசாமி (எல்டியுசி), பாலகிருஷ்ணன் (தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்), கீதா ஆகியோரும் பேசினர்.சென்னையில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர்  விருதுநகரிலும், மாநில பொதுச் செயலாளர்  வீ.அமிர்தலிங்கம் நாகப்பட்டினத்திலும், பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் புதுக்கோட்டையிலும் பங்கேற்றனர்.