சிகிச்சைக்கு வந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது மனிதாபிமானமற்றது!
முடிவைத் திரும்பப் பெற பெ.சண்முகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி, ஏப்.26- “பாகிஸ்தானில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக வந்திருப்பவர்களை இந் தியாவை விட்டு வெளியேறச் சொல்வது மிக மிகத் தவறானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார். தூத்துக்குடி தாளமுத்துநகர் வின் சென்ட் லாக்கப் மரண வழக்கில், 25 ஆண்டுகளாக நீதிக்காக போராடிய வர்கள் - வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் முன்னதாக செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நம்பி வந்தவர்களை வெளியேற்றுவது சரியல்ல!
பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பய ணிகள் மீது தாக்குதலை நடத்தி இருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடி யாது. ஆகவே, தாக்குதலுக்குக் காரண மான பயங்கரவாதிகள் யாராக இருந்தா லும் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இந்த சம்பவத்தை, ஒன் றிய பாஜக அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக தன்னுடைய வெறுப்புஅரசியலை தீவிரப்படுத்துவதற்கு பயன்படுத்துவதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவ விசாவில் வந்திருக்கக்கூடிய பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவரையும் காலக்கெடு விதித்து, இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற முறையில் ஒன்றிய அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு மிகமிகத் தவறானது. பாகிஸ்தானியர்களாகவே இருந்தாலும், அவர்களின் உயிரோடு விளையாடக்கூடிய ஒரு காரியம். ஆகவே, மருத்துவச் சிகிச்சைக்காக நம்முடைய நாட்டை நம்பி வந்திருக்கக் கூடிய அத்தகைய நோயாளிகளை - பயங்கரவாதிகளோடு இணைத்துப் பார்த்து, அவர்களை வெளியேற்றுவது சரியல்ல. அந்த முடிவை ஒன்றிய அரசாங்கம் கைவிட வேண்டும்.
நதிநீர் ஒப்பந்த ரத்து மனிதாபிமானமற்றது!
சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்துசெய்வது என்று எடுத்திருக்கும் முடிவும் சர்வதேச விதிகளுக்கு மிக மிகப் புறம்பானது. அந்த நாட்டு மக்களுக்கு குடிதண்ணீர், விவசாயம் ஆகியவற்றிற்காக சிந்து நதி நீரை பயன்படுத்துவது என்பது இரு நாடுகள் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒப்பந்தம். பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை என்ற பெயரில் - கோடிக்கணக்கான மக்களின் குடிநீர், உணவோடு சம்பந்தப்பட்ட நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது மனிதாபிமானமற்றது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. அதேநேரத்தில் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். கொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய வகையிலும் பயங்கரவாதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநில முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துவது என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். அதன்படி கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறோம். பாஜக-வைப் பொறுத்தவரை அவர்களுக்கு தேசபக்தி எல்லாம் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால், பிரதமர் மோடி, உடனடியாக ஜம்மு - காஷ்மீருக்குத் தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், 26 உயிர்களை வைத்து, அவர் பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். எந்தவொரு சம்பவம் நடந்தாலும், அதைத் தன்னுடைய அரசியலுக்கு எப்படி பயன்படுத்துவது எனும் தீய நோக்கத்தோடு தான் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டு காலமும் அது தான் நடக்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டார்.