தமிழ்நாட்டில் குறைந்தது 5.31% விவசாயத் தொழிலாளர்களுக்கு நிரந்தர சிறுநீரக பாதிப்பு உள்ளதும், அவர்களில் 50% பேருக்கு நீரிழிவு நோய், நீண்டகால உயர் ரத்த அழுத்தம், மரபனு நோய்கள் போன்ற இணை நோய்கள் எதுவும் இல்லை என்று மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதால் நீரிழப்பு ஏற்பட்டு சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்பது சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வடிகட்டும் திறனை படிப்படியாக இழக்கும் ஒரு நிலை. விவசாயத் தொழிலாளர்களிடையே CKD மற்றும் அறியப்படாத காரணத்தால் ஏற்படும் நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக மாநில அரசால் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வுகள், தொழில்சார் வெப்ப அழுத்தம், வேளாண் வேதிப்பொருட்களால் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளன.
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் 2023-க்கு இடையில் ஐந்து வேளாண்-காலநிலை மண்டலங்களில் உள்ள 125 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 3,350 தொழிலாளர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. "சிறுநீரக செயல்திறன் குறித்த சோதனைகளை ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு கட்டங்களாகவும், டிசம்பர் மாதத்தில் மீண்டும் மீண்டும் செய்தோம்" என்று ஆய்வின் தலைவர் மூத்த சிறுநீரக மருத்துவர் டாக்டர் என் கோபாலகிருஷ்ணன் கூறினார். முதல்கட்டத்தில், 3,350 பங்கேற்பாளர்களில், 584 (17.43%) பேருக்கு சிறுநீரக செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சோதனை செய்யப்பட்டபோது, சிறுநீரக செயல்பாடு குறைவாக உள்ளவர்களின் சதவீதம் 5.31% ஆகக் குறைந்தது.
அவர்களில் 50 சதவீதம் பேருக்கு சரக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, மரபணு பாதிப்பு என எந்தவிதமான இணை நோய்களும் இல்லை. நேரடி வெயிலில் பணியாற்றுவதால் அவர்களுக்கு சிறுநீரக செயல்திறன் பாதித்திருக்கலாம் என மருத்துவர் குழு தெரிவித்தது.
இந்த சூழலில், விவசாயத் தொழிலாளர்கள் 45 நிமிட வேலைக்குப் பிறகு நிழலில் நடந்து செல்லவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், தேவைப்படும்போது கழிப்பறையைப் பயன்படுத்தவும் டாக்டர் கோபாலகிருஷ்ணன் பரிந்துரைத்துள்ளார்.
