வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்ட மக்களைன் வங்கிக் கடன் ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே திரும்பச் செலுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை மற்றும் சூரல்மலா பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட 555 பேரால் எடுக்கப்பட்ட 1,620 கடன்களின் மொத்த நிலுவைத் தொகையான ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே ஏற்றுக்கொள்ள உள்ளது. இதற்கான நிதி, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி, மாநில அரசு பலமுறை ஒன்றிய அரசை அணுகியிருந்தது. நீதிமன்றமும் இதுகுறித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஒன்றிய அரசு மறுத்துவிட்டதால் கடன் பொறுப்புகளை அரசே ஏற்றுக்கொள்ளும் முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.
மறுவாழ்வு பட்டியலில் இடம்பெற்ற குடும்பங்கள், பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை இழந்தவர்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவுடன் (State-Level Bankers’ Committee) அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இதற்கிடையில், 2024 ஜூலை 30 முதல் வங்கிக் கடன்களுக்கு தற்காலிக தள்ளுபடி (moratorium) வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
மேலும், அந்தத் தேதியிலிருந்து விதிக்கப்படும் வட்டியை தள்ளுபடி செய்யவும், பேரிடர் பாதிக்கப்பட்டவர்களின் சிபில் (CIBIL) மதிப்பெண் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் வங்கிகளிடம் வலியுறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
