கல்பாக்கம் அணுசக்தித் துறைக்கு உட்பட்ட நகரியத்தில் தூய்மைப்பணியாளர்கள் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுசக்தித் துறைக்கு உட்பட்ட நகரியத்தில் சுமார் 110 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத போனஸ் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, நேற்று முதல் சிஐடியு (CITU) தலைமையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போனஸ் வழங்கப்படாததுடன், வருங்கால வைப்பு நிதி (PF) முறையாகப் பிடித்தம் செய்யப்படவில்லை என்பதையும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை நிர்வாகமும் ஒப்பந்ததாரரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை குடும்பத்துடன் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
