தேர்தல் நேரத்தில் வந்து தெறித்ததைவிடவும், பாஜக ஆதரவாளர்களிடமிருந்து தேர்தல் வெற்றிக்குப் பிறகு வந்து விழும் வாட்ஸ் அப் செய்திகள்மேலும் இறுகிக் கொண்டே செல்லும் அவர்களது மோசமான உளவியலை பிரதிபலிப்பதாக இருக்கிறது. 350 இடங்களில் வெற்றி பெற்ற பின்னும், 2014நிலையைக் காட்டிலும் கூடுதல் இடங்களைப் பிடித்தபின்னும் தங்கள் பக்கம் வந்து விழாத பகுதிகளை அவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. குறிப்பாக,கேரளத்தையும், தமிழகத்தையும் ஒருவேளை மந்திர சக்தி வசப்படுமானால் தூக்கி இந்தியப் பெருங்கடலில் வீசவும் தயங்க மாட்டார்கள் போலும்!“நாடே காவிகள் பக்கம், தமிழ் நாடே, நீ மட்டும்பாவிகள் பக்கம் “ என்கிற வசவுக் கவிதையில் தொடக்கி, சகிக்க முடியாத எரிச்சலைக் கொட்டித் தீர்த்து சில அன்பர்கள் கொட்டும் சொற்கள், விஷத்தைக் கக்கும் தோரணையில் இருக்கிறது. தாமரை மலர முடியாமல் போனதற்கு, மலரில் பிரச்சனை இல்ல, தமிழ் மண் எப்போதோ மலடாகிப் போய்விட்டது என்று ஆள் ஆளுக்கு ‘ஃபார்வர்ட்’செய்து கொண்டிருக்கும் இந்த சிந்தனை முத்தினைச் சிந்திய முதல் மேதாவி யாராக இருக்கும் என்று தெரியவில்லை. உலகிலேயே அதிகக் குடிகாரர்கள் இருக்கும் இந்த ‘இரண்டு’ மாநிலத்தின் வாக்காளர்கள் எப்படி ‘நல்ல’ முடிவை எடுப்பார்கள் என்று கேள்வி கேட்கிறார் இன்னோர் ஆய்வாளர். இழிவுபடுத்திப் பேச எந்த எல்லைக்கும் சென்றுகொண்டிருக்கின்றனர்.பகிர்ந்து கொள்ளக் கூசும் கொச்சையான விவரிப்புகளைக் கூச்ச நாச்சமின்றிப் பரப்பி, தங்களை மேட்டிமைப் படுத்திக் கொள்ளும் இந்த ஆன்மிகச் செல்வர்கள் விடும் சாபங்கள் புராணக் கதைகளில் வருவதைக் காட்டிலும் ஆத்திரமும், குதர்க்கமும் மிகுந்தவை. நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆளும் கட்சி சார்பானவராகத் தான் இருக்க வேண்டும், இல்லாவிடில் அத்தனையும் வீண் என்று கூக்குரலிடும் இவர்கள் சொல்ல வருவதென்ன? 542 பேரும் அமைச்சர்கள் ஆகிவிட முடியுமா?தொகுதி மேம்பாடு, மாநில வளர்ச்சி, தேசத்தைப் பற்றிய அக்கறை, ஆட்சியைக் குறித்த விமர்சனப் பார்வை - இவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இயங்க முடியாதா? அதுதானே அவர்களது முதல் கடமை?பாஜக ஆட்சி புரிந்த மாநிலங்களில் ஊழல் புகார்கள் கிழிந்து தொங்கியதை மறந்துவிட்டு, தமிழகவாக்காளர்கள் குறித்து சேற்றை வாரி இறைப்பானேன்? தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரணை எதிர்கொண்டிருக்கும் ஒருவரை மத்தியப்பிரதேசத்தில் பாஜக இப்போது நாடாளுமன்ற உறுப்பினராகவே வெற்றி பெற வைத்திருப்பதை மறப்பானேன்?பண மதிப்பு நீக்கம், ஜி எஸ் டி பிரச்சனைகள் முதற்கொண்டு விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், வேளாண் துறை நெருக்கடி, சிறு தொழில்கள் நசிவு உள்ளிட்டு, பசுவின் பெயரால்நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் வரை ஏராளமான விஷயங்களை மக்கள் மன்றத்தில் மிக அதிகம் பேசிய மாநிலமாக தமிழகம், கேரளம் ஆகிய இவ்விருமாநிலங்களும் என்றும் நினைவில் கொள்ளப்படும். நிகழ்ச்சி நிரலை ஆளும் கட்சி திருப்பிவைக்கும் திசைவழி எல்லாம் மற்ற மாநிலங்களில் பிரச்சாரங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில், மக்கள் நலன் சார்ந்த ஏராளாமான பிரச்சனைகளின்பால் விவாதங்களை எழுப்பிய தேர்தல் களமாக தமிழகம் அமைந்தது. வெற்றி தோல்வியைக் கடந்து, ஒரு பெரிய தேசத்து மக்களிடையே வேறுபாடுகளை விதையூன்றிப் பிளவுபட்டு நிற்க வைக்கும் முயற்சிகளுக்கு எதிரான உளவியலை முன்னெடுத்ததில் தமிழக, கேரள மாநிலங்கள் பெருமைக்குரிய பங்களிப்பை தேச ஒருமைப்பாட்டுக்கு நல்கியுள்ளன. எதிர்த்துக் கேட்டாலே தேச விரோதி, நகர்ப்புற நக்சல் என்றெல்லாம் பட்டம் சூட்டி வேட்டையாடும் வெறுப்பு அரசியல் குறித்த விழிப்புணர்வை மற்றபகுதி இந்திய வாக்காளர்களிடையே ஏற்படுத்த இயலாமல் போன வருத்தமே தமிழக வாக்காளர்கள் நெஞ்சில் இப்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. தாங்கள் சரியாகவே சிந்தித்தோம், எச்சரிக்கையோடே நடந்து கொண்டோம், ஒழுங்காகவே வாக்களித்தோம், இனியும் சளைக்காமல் தொடர் விழிப்போடே நடைபோடுவோம் என்று தான் அவர்கள் உள்ளம் பேசும். உடனடி எதிர்காலத்தில் கூடுதலாகவே சவால்கள் முளைக்கும் என்பதையும் அவர்கள் எளிதில் கண்டுகொள்ள முடியும், அவற்றுக்கெதிராகப் போராடவும் முடியும்.