கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அமைக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற சட்ட முன் வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆர் என்.ரவி அவர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் மூன்று மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டு தற்பொழுது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஏற்கனவே இதேபோன்று தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களை தாமதப்படுத்தியும், ஒப்புதல் அளிக்காமலும் தமிழ்நாடு அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியதற்கு உச்ச நீதிமன்றம் அவரது தலையில் குட்டிய போதும் அவரது நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.