tamilnadu

img

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நமத்துபோன பட்டாசு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை சாதாரண ஏழை எளிய மக்களுக்கு பயன்படாத நனைந்து போன பட்டாசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவையில் 2022 - 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி இந்த நிதிநிலை அறிக்கையை, இது இந்த ஆண்டுக்கான பட்ஜெட் மட்டுமல்ல, வரக்கூடிய 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட் என தெரிவித்துள்ளார்.

ஏழை, எளிய நடுத்தர மக்களுடைய வாழ்விற்கு வழிவகுக்கும் பட்ஜெட் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் மக்களுக்கு பயனளிக்கும் எந்த அறிவிப்பும் அதில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை இது நனைந்து போன பட்டாசு போல் உள்ளது.

ஏற்கனவே மோடி அரசு கடைபிடிக்கக் கூடிய புதிய உலகமய, தாராளமய கொள்கைகளை மேலும் தீவிரமாக அமல்படுத்துவதற்கான பட்ஜெட்டாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்தோ, நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை உருவாக்குவது குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த கிராமப்புற வேலை உறுதி திட்டத்தையும் படிப்படியாக முடமாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், விவசாயமும் நாடு முழுவதும் பொய்த்து போயிருக்கும் சூழ்நிலையில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதற்கு பதிலாக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 73 ஆயிரம் கோடி நிதியே இந்தாண்டும் ஒதுக்கப்பட்டிருப்பது அந்த திட்டத்தை படிப்படியாக சிதைப்பதற்கான நடவடிக்கையாகும். ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கென ஊதியத்தில் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டது, தற்போது 14 விழுக்காடாக பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய சுமையாக அமையும்.

48 ஆயிரம் கோடி ரூபாயில் 18 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால்  2.5 லட்ச ரூபாயில் ஒரு வீடு கட்ட முடியுமா என கேள்வி எழுப்பினார். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்குவதற்கு 2.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டை விட குறைவானது. ஏற்கனவே விவசாயிகள் கட்டுப்படியான விலை வழங்க வேண்டும், சட்ட பாதுகாப்பு வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் வாழ்நிலையை குறித்து இந்த அரசு கவலைப்படவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. இந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்த பிறகும் அதற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த கொள்முதலை படிப்படியாக கைவிடும் நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் சிறு குறுந்தொழில்கள் மிகப்பெரிய அளவில் மூடிக்கிடக்கின்றன. இதனால் பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்வதற்கு மானியம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அந்த நிறுவனங்களுக்கு மானியம் அளித்து மேம்படுத்துவதற்கு மாறாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம் ?                                             

ஏற்கனவே மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல திட்டங்களை ஒன்றிய அரசு அறிவிக்கும் பல திட்டங்கள் கபளிகரம் செய்யும் வகையில் உள்ளன. பேரிடர் காலத்தில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 60 விழுக்காடு மக்களுடைய சொத்து தற்போது குறைந்து 5 விழுக்காடாக குறைந்துள்ளது. கொரோனா காலத்திலும் கூட 10 விழுக்காட்டினரிடம் 75 விழுக்காடு சொத்து போய் சேர்ந்துள்ளது. கொரோனா காலத்திலும் கூட மோடி அரசின் தவறான கொள்கைகளால், திட்டத்தினால் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள்தான் பயனடைந்துள்ளன. இந்த பட்ஜெட் பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கும் வகையில்  உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது என வரும் மார்ச் 28, 29 தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் எல்.ஐ.சி பங்குகளை விற்கப்போகிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முதலில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத்தான் தனியாருக்கு தாரை வார்க்கிறோம் என அறிவித்தீர்கள். ஆனால் இப்போது லாபமீட்டக்கூடிய எல்,ஐ.சியையும் தனியாரிடம் தாரைவார்ப்பது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய அரசின் ஒரே நோக்கம் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தாரைவார்ப்பதுதான். ரயில்வே, நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அதை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப் போகிறோம் என்ற அறிவிப்பு அந்த தனியார் நிறுவனங்களை மேம்படுத்தவே உதவும். இதானல் எந்த மக்களுக்கும் பயன் இல்லை. எனவே இந்த பட்ஜெட் மழையில் நனைந்து போன பட்டாசு போல்தான் உள்ளது.