tamilnadu

11 சதவீத அகவிலைப்படியை வழங்க ஜாக்டோ-ஜியோ கோரிக்கை...

சென்னை:
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் புதனன்று (ஆக.11) சென்னையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், ச.மோசஸ் மற்றும் கு.தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்தக் கூட்டத்தில், அரசின் திட்டங்களை, அதன் பயனாளர்களுக்கு உரிய முறையில் சென்றடைய முழு ஒத்துழைப்பு நல்குவோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை படிப்படியாக நிறைவேற்றும் என்று நம்புவதாகவும், கூட்டமைப்பு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திக்க முதலமைச்சர் நேரம் ஒதுக்க கோரியும் வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், “பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2017 செப்டம்பர், 2019 ஜனவரி மாதங்களில் நடத்திய போராட்டத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதற்காக பணிமாறுதல் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தியபோது காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.