மதுரை:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை மறுதலிக்காமல் அவரது வழியில் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அரசின் கவனத்தை ஈர்க்கவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தேர்தல் கால வாக்குறுதிகளை நினைவூட்டும் வகையிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்.19 ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட உள்ளதாக மாநிலப்பொதுச் செயலாளர் ஆ.செல்வம் மதுரையில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வேன். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவார்கள். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தார். அவரது மறைவிற்குப் பின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறார். “ மறப்போம், மன்னிப்போம்” என்கிறார் முதல்வர். மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் அரசு ஊழியர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. குறிப்பாக ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றக் கோருகிறோம்.
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறை புகுத்தப்பட்டுவருகிறது. வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களை காலியாக உள்ள 4.50 லட்சம் பணியிடங்களில் பணியில் அமர்த்துங்கள் எனக்கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.பணி நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என அரசு ஊழியர் சங்கம் சந்தித்துப் பேசாத அமைச்சர்களே இல்லை. அவர்கள் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகக் கூறினார்கள். ஆனால், இதுவரை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை தமிழக முதல்வர் அழைத்துப்பேசவில்லை.
கடந்த பத்து தினங்களாக தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மறியல்-சிறை நிரப்பும் போராட்டமும், கடந்த மூன்றுதினங்களாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிப்.19-ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட உள்ளோம்.“மறப்போம்... மன்னிப்போம்” எனக் கூறும் தமிழக முதல்வர், அந்த உயரிய கோட்பாட்டை மனதில் நிறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும். சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊயர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவேண்டும். முடக்கப்பட்டுள்ள அக விலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அவர்களும் தங்களது அடுத்த கட்ட நிகழ்வை அறிவிப்பார்கள் என்றார்.செய்தியாளர் சந்திப்பின் போது மதுரை மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி, துணைத் தலைவர் ஜெ.மகேந்திரன், வட்டக் கிளை நிர்வாகிகள் ஞானபிரகாஷம், பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.