tamilnadu

img

ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்திடுக - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

ஆசிரியர் பணி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கும் வகையில் பணியிடங்களை அதிகரித்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (நவ.15) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

தமிழகத்தில் 2013இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி 19,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்குப் பின்பு கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் நியமனத்துக்கான எந்தத் தேர்வுகளையும் நடத்தவில்லை. இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனத் தேர்வில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள போதிலும் 3192 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாத நிலையில் தற்போது 14,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 3192 பணியிடங்கள் மட்டுமே நியமிப்பது எந்த வகையிலும் பொருத்தமான நடவடிக்கையாகாது. ஆசிரியர் பணியை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போதுள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.