பாடலை முணுமுணுத்துக் கொண்டே வந்த தேர்வரைப் பார்த்த சீனியர். என்ன இது இந்தப் பாட்டு... வேற பாட்டே கிடைக்கலையா.. இல்ல சீனியர்... பாடிட்டே இருக்கேன்னு கூட எனக்குத் தோணல... பஸ்ல வர்றப்ப கேட்டுட்டு இருந்தேன். ரொம்ப நேரமா முணுமுணுத்துக்கிட்டே இருக்கேன்.. எப்பவும் இப்புடி பாட்டெல்லாம் கேட்டுட்டு வர மாட்டீங்களே.. இன்னிக்கு மாதிரித் தேர்வாச்சே... கவனம் சிதறாம இருக்கட்டுமேனுதான்.. படிச்சிட்டீங்களா.? என்ன சீனியர்... நாம இந்தப் பிரபஞ்சத்த எவ்வளவு பார்க்குறோமோ அவ்வளவு கூடப் படிக்க முடியாது போலருக்கே.. அதென்ன பிரபஞ்சம்.. ஆமா.. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்துல 5 விழுக்காடுதான நாம பாக்குறோம்.. அது மாதிரிதான் 10 பாடங்களச் சொன்னாங்க மாதிரித் தேர்வுக்காக.. அஞ்சு விழுக்காடுதான் படிச்சுருப்பேன்.. பரவாயில்லையே.. மத்த பாடமெல்லாம் கருந்துளைதானா..
சீனியர்... நல்லவேளை, நினைவுபடுத்துனீங்க... கருந்துளைனா கருப்பா இருக்கும்னு நெனச்சுட்டு இருந்தேன். அது வெள்ளையாமே..? ஆமா.. இந்த நூற்றாண்டோ சிறந்த விஞ்ஞானினு சொல்லப்படுற ஸ்டீபன் ஹாக்கிங்தான் அதத் தெளிவுபடுத்திச் சொன்னாரு.. வெள்ளையா இருக்குறவருக்கு கருப்பசாமின்னு பெயர் வெச்ச மாதிரிதான்.. அவரோடதுதான அந்த A Brief History of Time புத்தகம்... 1 கோடிப் பிரதிகள் வித்துருக்காமே... இந்தப் புத்தகத்தோட பேரச் சொல்லி, யாரு எழுதுனதுன்னு ரெண்டு, மூணு தேர்வுல வினா வந்துருந்துச்சு.. அடுத்த தேர்வுல அவரப்பத்தி வேற ஏதாவது கூட கேக்கலாம்... இன்னும் படிச்சுக்குறது நல்லது.. அவருக்கு என்ன நோய் இருந்துச்சுனு கேப்பாங்க... வித்தியாசமா ஏதாவது சொல்லுங்க, சீனியர்.. அவரோட பிறந்தநாள் ஜனவரி 8, 1942.. கலிலியோ இறந்தது ஜனவரி 8, 1642. கலிலியோவோட 300வது இறந்ததினத்த அனுசரிக்குற அன்னிக்கு ஹாக்கிங் பிறந்துருக்காரு.. விவசாயக் குடும்பம் அவரோட பெற்றோர்கள் எல்லாம்.. தன்னோட வாழ்நாள் முழுக்க சக்கர நாற்காலில காலத்தக் கழிச்சவரு.. ஓ... நல்ல விபரமா இருக்கே.. அவர்கிட்ட நிறைய பேர் ஆராய்ச்சி மாணவர்கள் இருந்தாங்க.. ஆனா அவர்கிட்ட இருந்து ஆய்வு பண்றது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது... ஒரு தடவை, ஒரு மாணவர் ஸ்டீபன் ஹாக்கிங்க ரொம்ப வெறுப்பேத்திக்கிட்டே இருந்தாராம்.. வந்த கோபத்துக்கு சக்கர நாற்காலியோட சக்கரத்த அவரோட கால்ல ஏத்திட்டாராம். உலகத்துல இருக்குற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுங்குறது நாமெல்லாம் உலகக் குடிமக்களா ஆகுறதுதான்னு சொன்னாரு.. ஆழமா உழுதுருக்கீங்க நீங்க..
அகலமும் கவனத்துல இருக்கனும் தம்பி.. என்ன சீனியர்... எல்லாரும் அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்னு தானே சொல்வாங்க.. வங்கித் தேர்வுலாம் எழுதுறாங்கன்னா, ஆழ உழுகுறது சரிதான்... ரொம்ப குறைவான பாடத்திட்டம்... கணிதம், காரணம் அறிதல், மொழி... அப்புறமா நடப்பு நிகழ்வுகள்... நடப்பு நிகழ்வுகள்லயும் கடைசியா வந்த மூணு மாசத்துல இருந்துதான் அதிகமா கேப்பாங்க.. நெறயா பயிற்சி எடுத்தா போதும்.. ஆனா, யு.பி.எஸ்.சி. டி.என்.பி.எஸ்.சிலாம் எழுதுறவங்களுக்கு பெரிய பாடத்திட்டம்.. அகலமாவும் உழணும்.. வேற வேற மாதிரி தயாரிப்பும் வேணும்... சரிதான.. ஆமா.. நினைவுல வெச்சுக்குறதுக்கு விளையாட்டாவும் படிக்கனும்.. சீனியர்... உங்ககிட்ட கேக்கனும்னு நெனப்பேன்... உங்க கைல எப்பவும் இந்த வாரப்பத்திரிகைலாம் பாத்துருக்கேன்... நம்ம தேர்வுக்கு இதெல்லாம உதவுமா..? சாமியார் பத்திலாம் படிக்குறதுக்கு ரொம்ப நல்லாருக்கும்..
என்ன சீனியர்.. விளையாட்டாப் படிக்கச் சொன்னீங்க, சரி... ஆனா., விளையாடுறீங்களே.. இல்லப்பா... நெஜமாத்தான் சொல்றேன்... இந்த வாரப்பத்திரிகைகள்லதான் சாமியார் அப்புடி ஏமாத்திட்டார்... இப்புடி ஏமாத்திட்டார்னு வரும்.. அதுல நமக்கு என்ன இருக்கு.. அவங்கள்லாம் நல்லாப் படிச்சவங்க.. அதனாலதான் ஏமாத்த முடியுது.. நீங்களே விளக்கமாச் சொல்லிருங்க.. முன்னாடிலாம் சாமியாருங்க சில பேரு யாக குண்டம் வளர்ப்பாங்க.. பத்துப் பதினைஞ்சு செங்கல் அடுக்கி, அதுக்குள்ள மண் கோபுரம் கட்டி வெச்சுருப்பாங்க.. பக்கத்துல நெய்ப்பாத்திரம்... குண்டத்துல நெய்ய ஊத்திக்கிட்டே இருப்பாரு... ஒவ்வொருத்தரா அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போவாங்க... திடீர்னு மணல்ல இருந்து புகை வரும்.. எல்லாரும் உணர்ச்சி வசப்பட்டு ஆடுவாங்க.. சாமியாரும் நெய்ய வேகமா ஊத்துவார்... கப்னு தீப்பிடிச்சு எரியும்.. ஒட்டுமொத்தக் கூட்டமும் பரவச நிலைக்குப் போயிடும். நான் இத சில வீடியோக்கள்ல பாத்துருக்கேன்... அந்நேரம் அங்க இருக்குற பக்தர்கள்ல சில பேரு உணர்ச்சிவகப்பட்டு கழுத்துல, கைல போட்டுருக்குற நகை, பாக்கெட்டுல இருக்குற பணம்னு எல்லாத்தையும் அவர் முன்னாடி வெச்சுட்டுப் போயிருவாங்க.. ஆமா... அற்புதம் நடந்ததப் பாத்தது அவங்க வாழ்வுல கிடைச்ச புண்ணியம்னு பேசிட்டுப் போவாங்க.. .இதுல படிச்சவங்கதான் அதிகமா இருக்கும்... அவங்கதான் சட்டுனு ஏமாந்துர்றாங்க.. அது அற்புதம் இல்லையா சீனியர்.. அது அறிவியல்..
அப்புடியா... நமக்குத் தேர்வுக்கும் உதவுமா? நிச்சயமா உதவும்... மணலைக் கூட்டி வைக்குறதுக்கு முன்னாடி அடில பொட்டாசியம் பர்மாங்கனேட்ட பரப்பி வைப்பாங்க... அதுக்கும் நெய்க்கும் என்ன சம்பந்தம்..? பாத்திரம் மட்டும்தான் நெய்ப்பாத்திரம்.. அதுல இருக்குறது கிளிசரின்... பொட்டாசியம் பர்மாங்கனேட்டும், கிளிசரினும் சேர்றப்ப வெப்பம் உருவாகும்... அதுதான் புகையக் கிளப்புது... பின்னாடி தீப்பிடிச்சும் எரியும்.. அப்போ அந்த சாமியார் சயின்ஸ் பட்டதாரியோ..? கல்லூரில போய்ப் படிச்சாரோ இல்லையோ, வேதிப் பொருட்கள் என்ன செய்யும், அத வெச்சு தான் எப்புடி ஏமாத்திப் பணம் சம்பாதிக்கலாம்னு புரிஞ்சு வெச்சுருக்காரு.. இருங்க.. இருங்க சீனியர்... பொட்டாசியம் பர்மாங்கனேட் வந்து KMnO4... கிளிசரின் C3H8O3... சரியாச் சொல்றனா... இந்த வினா கூட தேர்வுல ஏற்கனவே வந்துருக்கு.. ஒரு தடவை எதுக்குப் பயன்படுதுன்னும் கேட்டாங்க.. இனிமே நானும் வாரப்பத்திரிகைலாம் வாங்கிப் படிக்குறேன்..
வாரப்பத்திரிகைனு இல்ல... எதப்படிச்சாலும் நம்ம பாடத்தோட தொடர்புபடுத்திப் படிச்சுக்க வேண்டியதுதான்.. ஆமா.. ஏற்கனவே நீங்க சினிமா, கிரிக்கெட் பாக்குறப்ப எல்லாம் பாடங்கள எப்புடி நினைவுல வெச்சுக்குறதுன்னு சொல்லிக் குடுத்துருக்கீங்களே.. அப்போது மற்ற தேர்வர்கள் வந்து சேர்ந்தனர். என்ன சீனி... எப்புடி இருக்கீங்க... சார், பாத்தீங்களா.. நான் சீனி இல்ல.. இப்புடித்தான் நாங்களும் பல தப்பான வினாக்கள அப்புடியே மனசுக்குள்ள செதுக்கி வெச்சுருக்கோம்... மாத்திக்க முடியல.. அதாவது சீனி.. உங்களப் பாத்தவுடன என்ன சீனி.. எப்புடி இருக்கீங்க சீனி.. பாத்துப் படிங்க சீனி... இன்னிக்கு மாதிரித் தேர்வு நல்லா எழுதிரலாம் சீனி.. போய்ட்டு வர்றேன் சீனின்னு... நாம சந்திக்குறப்ப நாலஞ்சு தடவை உங்க பெயரைச் சொல்லிக்கிட்டா அப்புறம் மறக்கவே முடியாது.. சார்... அப்பவாவது சரியான பெயரச் சொல்லிக்கலாமே.. சிரிப்பு அலைமோதியது.