தேர்வுகளோ தேர்தல்களோ, விளையாட்டுப் போட்டிகளோ வினையான போர்களோ வெற்றி அல்லது தோல்வியில் தான் முடியும். வென்றவர் சிரிப்பதும் தோற்றவர் அழுவதும் இயல்பானதே.
வென்றவர்கள் கொண்டாடும் போது வெற்றி “வாகை” சூடிவிட்டதாக குறிப்பிடுவதுண்டு. வெற்றிக் கொடி நாட்டியதாகக் கூறுவதுமுண்டு.
ஜெயக்கொடி, வெற்றிக் கொடி என்பதெல்லாம் சரிதான்.
இந்த “வாகை” சூடுதல் என்பது என்ன?
வாகை சூடவா என்றொரு தமிழ்த் திரைப்படம் வந்து வெற்றிகரமாக ஓடியது. அண்மையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சி துவங்கி அதன் கொடியில் வாகைப்பூவை இடம்பெறச் செய்திருக்கிறார்.
விளையாட்டுப் போட்டிகளில் கூட வெற்றிவாகை சூடியது இந்திய அணி என்றே செய்திகளில் குறிப்பிடப்படும்.
வாகை சூடுதல் என்றால் வாகைப்பூவை தலையில் சூடுதல் என்று பொருள். ஏன் வாகைப்பூவை தலையில் சூட வேண்டும்?
இதுதான் பண்டைத் தமிழ்ப் பாரம்பரியம்.
இலக்கியங்களில் குறிப்பாக சங்க இலக்கியங்களில் திணை, துறை என்று பாடல்களின் கீழ் குறிப்புகள் காணப்படும்.
திணைகளில் அகத்திணை, புறத்திணை என்று பிரிக்கப்பட்டிருக்கும். அகத்திணை என்பது தலைவன், தலைவி தொடர்பான காதல் வாழ்க்கையை - அக வாழ்க்கையைச் சித்தரிக்கும்.
புறத்திணை என்பது போர் உள்ளிட்ட புறவாழ்க்கையைச் சித்தரிக்கும். இதைத்தான் அகமும் புறமும் - காதலும் வீரமும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புறத்திணையில் போர் நிகழ்வுகள் தொடர்பாக பல்வேறு திணைப்பிரிவுகள் குறிப்பிடப்படுகின்றன. இவை பழங்காலத் தமிழகத்தின் போர்முறைப்பெயர்கள் பற்றிய பதிவுகள் ஆகும். போரின் பல்வேறு கட்டங்களும் அதன் பெயர்களும் நமக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. இதனை “புறப்பொருள் வெண்பாமாலை “ பின்வரும் பாடலாகத் தருகிறது.
“வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் -உட்காது
எதிரூன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்தல் ஆகும் உழிஞை;- அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்துமிக்கார்
செருவென் றது வாகையாம்”
போர்க்களத்தில் வென்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். அதனால்தான் வாகை சூடினர் என்று மன்னர்கள் பாராட்டப்பட்டனர்.
மன்னர்கள் மட்டும்தானா, மக்களாகிய நாமும் தான் வென்றவர்களை வாகை சூடியவர்கள் என்று
பாராட்டுகிறோம்.
ஒவ்வொரு திணையும் ஒவ்வொரு பூவின் பெயராலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது முக்கியமானது. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ஒவ்வொரு திணையின் பெயரை . இதை விரித்துச் சொல்ல ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி கட்டுரை தேவைப்படும்.