சென்னை வானொலி நிலையம் காலை நேரத்தில் மாநிலச் செய்திகளுக்கு முன்னர் சர்வமத பிரார்த்தனை கீதங்களை பக்தி மாலையாக ஒலிபரப்பி வருவதை எழுபதுகள் வரை கேட்டதுண்டு. அதன் வாயிலாகத்தான் குணங்குடி மஸ்தான் சாகிப்பின் பாடல்களுடனான அறிமுகம் ஏற்பட்டது. றகுமான் கண்ணி,மனோன்மணிக் கண்ணி, முகியித்தீன் சதகம் போன்றவை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தீவிர இஸ்லாமிய இறையடியாராக இருப்பினும் “மத பேதம் ஓதி மதி கெட்டவர்க் கெட்டாத வான் கருணை வெள்ளம்” என்றும், “மதம் அத்தனையும் அற்ற மதம் உற்று யானும் உம் மதமாக அருள்புரியவும்” என்றும், “ஏழைஅடி யேன் அறிவிலாமல் உள றுந்தமிழ்க்கு இரங்குவதும் எக்காலமோ தீதுமத பேதங்கள் அற்றுமே எங்குமிது செல்வதும் எக்காலமோ” என்றும் அவரால் மட்டுமே பாடமுடியும் என்பதை அறிகையில் பிரமிப்பும் கூடியிருக்கிறது. இறைவழிபாட்டு முறையை குறியீட்டு முறையில் கூறும் வகையில் அவரது பாடல்கள் அனைத்தும் அமைந்திருந்த போதிலும் மனோன்மணிக் கண்ணியில் “முட்டை பொரிப்பேன் முழுக் கோழியும் பொரிப்பேன்/ தட்டைப் பீங்கானில் தருவேன் மனோன்மணியே/ ஆட்டுக் கறியுங் கொள்வேன் அதிலனந்தம் வகை சமைப்பேன்/ கூட்டுக் கறியும் பண்ணிக் கொடுப்பேன் மனோன்மணியே/ குட்டிக் கறிதானுங் குழம்பு பண்ணித் தாளித்தோர்/ சட்டிக் கறியேனும் தருவேன் மனோன்மணியே” என்ற வரிகள் இன்றும் அவ்வப்போது அசைபோடவைத்திருக்கிறது.
இத்தகைய சூஃபி மெய்ஞ்ஞானி 1788ல் குறுத்தங்குடி யெனும் குணங்குடியில் பிறந்து பல்வேறிடங்களில் வாழ் அனுபவமும் மெய்ஞானமும் பெற்று பின்னாளில் சென்னப்பட்டணம் இராயபுரம் பிச்சாண்டித் தெருவில் இருந்த பாவா லெப்பையின் கள்ளிக் காட்டில் தவமி ருந்து 1835ல் உயிர் நீத்தார். சுல்தான் அப்துல் காதிர் எனும் பெயர் சூட்டப்பட்டவராயிருப்பினும் அவர் குணங்குடி மஸ்தான் என்றே அழைக்கப்பட்டு வந்தார் என்பதோடு அவரது பாடல்கள் எங்கிலும் குணங்குடி சுட்டிக் காட்டப் பட்டுள்ளது என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது. குணங்குடியார் அவரது தாய் ஊரான தொண்டி என்பதிலிருந்து தொண்டியார் என்றும் அழைக்கப்பட்டு வந்ததாகவும் அதன் அடிப்படையில்தான் இராய புரத்தில் தவமிருப்பினும் வடக்கில் உள்ள கிராமம் தொண்டியார் பேட்டை என்ற பெயரினைப் பூண்டதோடு பின்னாளில் திரிந்து தண்டையார்பேட்டையாகியது என்று மஸ்தான் சாகிப்பினை போற்றிக் கொண்டாடி வருவோர் கூறி வருகின்றனர்.
குணங்குடியார் பாடல்களை தொகுத்த அப்துல் ரகு மான் மட்டுமின்றி, சாகித்திய அகாதெமிக்காக மஸ்தான் சாகிப்பின் வரலாற்றைத் தொகுத்த உ. அலிபாவா அவர்களும் தொண்டையார்பேட்டை பெயர் பெற்றது குறித்து விரிவாகவே எழுதியுள்ளனர். இவர்கள் மட்டு மின்றி பலரும் இக்கருத்தையே கொண்டிருக்கின்றனர். 2024 ஏப்ரல் 14 தேதியிட்ட தினமணி தமிழ்மணியில் குணங்குடியார் குறித்த நாகூர் ரூமியின் புத்தகத்தை குறிப்பிட்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் சென்னையில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்த போதி லும் தண்டையார் பேட்டையின் பெயர்க் காரணத்தை தற்பொழுதுதான் அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். (இதுவே இக்கட்டுரை எழுதிட தூண்டுகோலாய் அமைந்தது) இத்தகைய கருத்துக்கள் சென்னப்பட்ட ணத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் பெயர்கள் பற்றி காலங்காலமாகவே இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் சென்னப்பட்டணம் மதராஸ் பெயர் குறித்த மூலத்தை வரலாற்றாசிரியர் எவரும் எடுத்து ரைக்கவில்லை. ஆனபோதிலும் தொண்டியார் பேட்டை தண்டையார்பேட்டை அப்படியல்ல. தண்டோர், தண்டாவுடு, தண்டேயவாண்ட், தண்டோர்பேட், தண்டை யார்பேட்டை என்று பல்வேறுவிதமாக ஆவணங்களில் பதிவாகியுள்ள அவ்விடம் இன்று தண்டையார்பேட்டை யாக திரிந்து உள்ளதேயொழிய என்னாளிலும் அது தொண்டியார் பேட்டையாக இருந்ததில்லை. அவ்வாறா யின் தொண்டியார் பேட்டைதான் திரிபுற்று தண்டை யார் பேட்டையாக மாற்றமடைந்ததா என்ற கேள்வி எழு கிறது. அலகாபாத் பிரயாக்ராஜ் என்று மாற்றமடைந்தைப் போன்றதல்ல இது என்பதையும் இத்தருணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 1788ல் பிறந்த குணங்குடியார் சென்னப்பட்டணத்தில் 12 ஆண்டுக்காலம் இருந்து 1835ல் பரிபூரணம் அடைந்தி ருக்கிறார். கிட்டத்தட்ட 1823 ம் ஆண்டிலிருந்து இம்மாநக ரில் இருந்து வந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த அடிப்படையை மனதில் கொண்டு சென்னப்பட்ட ணத்தின் வரலாற்றுப் பகுதிகளை காண்போம்.
108 கெஜம் நீளம் 100 கெஜம் அகலம் என்ற அளவில் உருவான செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளே அன்னாளில் சென்னப்பட்டணம் என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. பட்டணம் என்று குறிப்பி டப்பட்டாலும் உண்மையில் அதுவும் ஒரு கிராமமே என்பதை அறிந்திட வேண்டும். ஏற்கனவே மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம் போன்றவை புகழ் பெற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பின்னாளில் இவையன்றி பல்வேறு சிறிய பெரிய கிராமங்கள் வெவ்வேறு முறைகளின் வாயிலாக சென்னப்பட்டணத்து டன் இணைந்திருக்கிறது அல்லது இணைக்கப்பட்டி ருக்கிறது. இதுவே சென்னப்பட்டணத்தை பெரும்பட்டண மாக மாற்றியிருக்கிறது. அப்படி இணைந்த ஒரு கிரா மம்தான் தண்டையார்பேட்டை. கிழக்கிந்திய கம்பெனி யின் பதிவுகளில் துவக்க காலங்களில் தண்டோர் என்றே இக்கிராமம் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது. இதுவே சிற் சில இடங்களில் நகரமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தண்டோர் எனும் தண்டையார்பேட்டை குறித்து சென்னப்பட்டண வரலாற்றில் ஏராளமான குறிப்புகள் காணப்படுகிறது. டால்பாய் வீலரின் மெட்ராஸ் இன் ஓல்டன் டைம்ஸ், ஹென்றி டேவிசன் லவ்வின் வெஸ்டிஜ்ஸ் ஆஃப் மதராஸ் ஆகிய இரு புத்தகங்க ளும் இது பற்றிய தகவல் களஞ்சியமாகவே உள்ளது. சென்னப்பட்டணத்தின் வரலாற்றை எழுதக்கூடியோர் இவ்விரு புத்தகங்களைக் கடந்து செல்லவும் முடியாது. லண்டனில் செயல்பட்டு வந்த கவர்மெண்ட் ஆஃப் இந்தியா சார்பில் 1913ல் ஜான் மர்ரே நிறுவனம் லவ்வின் புத்தகத்தை பதிப்பித்தது. ஏற்கனவே பத்திகளாக எழு தப்பட்ட டால்பாய் வீலரின் புத்தகம் 1861ல் ஹிக்கின் பாதம்ஸ் நிறுவனத்தால் அச்சிடப்பட்டு கிரேவ்ஸ் அண்ட் கோ ஸ்காட்டிஷ் பிரஸ்ஸால் பதிப்பிக்கப்பட்டது. இவற்றி லிருந்து தொகுக்கப்பட்டதுதான் இக்கட்டுரையில் தரப்படும் விவரங்களாகும்.
1678 மார்ச் 16 தேதியிட்ட செயிண்ட் ஜார்ஜ்கோட்டை யில் பராமரிக்கப்பட்டு வந்த அன்றாட விவகாரங்கள் மற்றும் நாட் குறிப்புகளில் தண்டோர் குறித்து செய்தி யொன்றை அறிகிறோம். புலிகட்டின் கவர்னர் ஜாக்வெல் காலியர் அனுப்பிய இரு தூதுவர்கள் கடிதத்துடனும் அன்பளிப்புகளுடனும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த போது அவர்களுக்கு மரியாதையுடன் வரவேற்ப ளிக்கப்பட்டிருக்கிறது. சாப்பிட்டு ஓய்வெடுத்து மறுநாள் அவர்கள் தண்டோருக்கு புறப்பட்டனர் என்று விவகாரக் குறிப்புகளில் காணப்படுகிறது. 1679ல் கோல்கொண்டாவில் உள்ள பிரிட்டிஷாரின் அரசியல் விவகாரங்களுக்கான ஏஜெண்ட் பிராமணி வீர ராகவய்யாவிற்கு ஸ்ட்ரேன்ஷாம் மாஸ்டர் கோரிக்கை ஒன்றை விடுக்கிறார். சாந்தோம் உள்ளிட்ட பல்லாவரம், நம்மங்கலம், ஆலந்தூர், நந்தம்பாக்கா, மாம்பலம், சட்டோவிடா ஆகிய கிராமங்களின் வாடகையை பகோடா 1300 லிருந்து 1500 ஆக உயர்த்திடவும், திருவெட்டோர் மற்றும் அதைச்சார்ந்த சாத்தங்காடு, சடையங்குப்பம், தண்டோர், எரதலாசேரி, எர்ணாவூர், கட்டிவாக்கம் ஆகியவற்றுக்கு பகோடா 900 என்று நிர்ணயம் செய்வதோடு, யெக்மோர் மற்றும் இதர கிராமங்களான பெர்ஷவாக்கா, புதுப்பாக்கா, வேப்பேரி, கீப்பாக்கா, செட்டிபேட்டா, அமஞ்சக்கா, லும்க பாக்கா, ரோஷனா, புதுரோ, அகரம் ஆகியவற்றின் பொருட்டு பகோடா 670 ஐ வாடகையாக தருவதாகவும் அறிவித்திருந்தார். இக்கோரிக்கை 1679 மார்ச் வாக்கில் அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிட்ட கிராமங்களின் பெயர்கள் தாறுமாறாக இருப்பதைப் போன்று இருந்தாலும் அவை எவை எவை என்பதை நம்மால் ஊகிக்க முடியும்.
1690ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதியிட்ட கோட்டை விவகாரங்கள் மற்றும் நாட்குறிப்புகளிலிருந்து தண்டை யார் பேட்டை பற்றிய செய்தியை சற்று விவரமாகவே அறிய முடிகிறது. ஜெனரல் ஜுல்பிஃகர் கான் செஞ்சி யில் மராத்தாக்களுக்கு எதிராக போரிடும்பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டவர். அவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு விண்ணப்பமொன்றை அளிக்கிறார். மத ராஸ், திருவல்லிக்கேணி ஆகியவற்றின் வருடாந்திர வாடகை பகோடா 1200ஐ தள்ளுபடி செய்வதாகவும், ஆண்டுதோறும் பகோடா 300 வருவாய் கிடைக்கக்கூடி யதும் மதராஸுக்கு அருகாமையில் அமைந்துள்ள தண்டோர், பெர்ஷவாக், யெக்மோர் ஆகிய மூன்று சிறிய நகரங்களை வாடகை ஏதுமின்றி அன்பளிப்பாக அளிப்ப தாகவும், இதன் பொருட்டு மதராஸில் மொகலாய மன்னர் உருவம் பொறித்த நாணயம் அச்சிடும் உரிமையை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். இந்த விண்ணப்பத்தில் தண்டையார்பேட்டை தண்டோர் என்றும் புரசைவாக்கம் பெர்ஷவாக் என்றும் எழும்பூர் யெக்மோர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக் கது. அதாவது குணங்குடியார் அவதரிப்பதற்கு கிட்டத் தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தண்டையார் பேட்டை எனும் பண்டைய கிராமம் தண்டோர் கிராம மாக கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் பதிவாகி யுள்ளது. தண்டோர் எனும் தண்டையார்பேட்டை பற்றி ஏராள மான தகவல்கள் இந்த வரலாற்றுப் புத்தகங்களில் கொட்டிக் கிடக்கிறது. தவிர 1798ம் வருடத்திய நிலப்படம் மற்றும் 1822 ரவென்ஷாவின் நிலப் படம் ஆகியவற்றிலும் தண்டோர் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. இதில் பட்டணத்தின் எல்லைகள் தெளிவாகவே குறிப்பிடப்பட் டுள்ளது. தெற்கில் சாந்தோம் ஆற்றின் தென் கரையும் அதன் தொடர்ச்சியாக லாங் டேங்க், நுங்கம்பாக்கம் ஏரி, சேத்துப்பட்டு பின் பூந்தமல்லி ஆறு, தொடர்ந்து கீழ்பாக்கம், பெரம்பூர் கிழக்கில் கடல் வரையிலும் இதில் தண்டையார் பேட்டை கிராமம் உள்ளடங்கியதையும் காணலாம்.
இன்னொரு அம்சம் கோட்டை வெள்ளையர் நகரம் என்றும் அதற்கு வெளியே உள்ளவை கறுப்பர் நக ரென்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. 1921-22 வரை இப்பெயரே நீடித்து வந்திருக்கிறது. வேல்ஸ் இளவரச ரின் இந்தியப் பயணத்தை யொட்டி கறுப்பர் நகரம் ஜார்ஜ் டவுன் என்ற கௌரவமான பெயரைப் பெற்றிருக்கி றது. இதைப் பற்றி கூறும்போது ஜார்ஜ் டவுனின் சுற்றுப் பட்டில் ராயுபுரம் மற்றும் தொண்டையார் பேட்டை இருப்பதாக லவ் தனது புத்தகத்தின் துவக்கத்திலேயே குறிப்பிடுகிறார். எனவே தொண்டியார்பேட்டைக்கும் தண்டோர் எனும் தண்டையார்பேட்டைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை தெளிவாகவே அறியமுடிகிறது. அதே நேரத்தில் அது தொண்டியார்பேட்டை அல்ல என்பதி னால் மகத்தான சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிப்பை சிறுமைப்படுத்துவதாகவும் அவ ருக்கும் சென்னப்பட்டணத்திற்கும் யாதொரு சம்பந்த மும் இல்லை என்பதை நிறுவிடும் முயற்சியாகவும் இதை கருதலாகாது. இவையன்றி மஸ்தான் சாகிப் பற்றிய மற்றொரு செய்தியொன்று ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது. தாது வருஷம் (1876-77 ஆக இருக்கலாம்) புரச பாக்கம் ஏழுமலைப் பிள்ளையவர்களது விவேக விளக்க அச்சுக்கூடத்தில் சரவணபுரம் சண்முகமுதலி யாரவர்களால் பார்வையிடப்பட்டு பதிப்பிக்கப்பட்ட பாடல் தொகுப்பின் அட்டையில் மௌனதேசிக சுவாமி கள் செய்கு சுல்த்தான் அப்துல் காதிர் லெப்பை ஆலிம் என்னும் குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திரு வாய்மலர்ந்தருளிய திருப்பாடற்றிரட்டு என்றே அறி முகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகம் மஸ்தான் சாகிப்பை மௌனதேசிக சுவாமிகளாக போற்றி வந்திருப்பது பெருமை கொள் ளத்தக்கதாக அமைகிறது.