tamilnadu

img

“விலைக்கு வாங்குவதா விடுதலை?” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

யந்திரகதியான வாழ்க்கை வட்டத்திலிருந்து விடுபட்டு வாழ ஆசைப்பட்டவன்,அதற்காகத் தேர்ந்தெடுத்த வழிமுறை வங்கிக் கொள்ளை.இதன்மூலம் அவன் விரும்பிய சுதந்திர வாழ்க்கை கிடைத்ததா என்பதே”TheDelinquents” 

(குற்றமிழைத்தவர்கள்) திரைப்படக் கதை. ப்யூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு வங்கியில்  பணிபுரிபவன் மோரன். திருமணமாகாதவன்.யந்திரகதியான வாழ்க்கை,ஒரே மாதிரி யான சலிப்பைத் தரும் வங்கிப்பணி, வேலை யில் சேர்ந்த குறுகிய காலத்திலே விரக்தி யடைகிறான். ஓய்வு பெறும்போது 3.25 லட்சம் டாலர்கள்  பணப்பலனாகக் கிடைக்குமென கணக்கிடு கிறான். ஆனால் அதற்காக,25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.இப்பொழுதே இத்  தொகையை வங்கியிலிருந்து கொள்ளை யடித்து விட்டு,குற்றத்தை ஒப்புக் கொண் டால், மூன்றரை ஆண்டுகளே சிறைத் தண்டனை கிடைக்கும் என்று முடிவெடுத்து, வங்கியிலிருந்து 6.50 லட்சம் டாலர்களை கொள்ளையடிக்கிறான். அன்றிரவே சகப் பணியாளர் ரோமனை சந்தித்து,கொள்ளையடித்த பணத்தை அவனிடம் ஒப்படைக்கிறான்.இதனை விடு தலையாகி வெளிவரும் போது சமபங்கீடு செய்து கொள்ளலாம் என்ற முடிவோடு இருவரும் பிரிகிறார்கள்.  மோரன் ஆள் ஆரவமற்ற வனப்பகு திக்கு செல்கிறான்.அங்கு நோர்மா என்ற  பெண்ணைச் சந்திக்கிறான்.காதல் கொள்கிறான். சிறிது காலம் அவளோடு அங்கேயே உல்லாசமாகச் சுற்றுகிறான்.தான் செய்த தவறை காதலியிடம் மறைக்கி றான்.இந்த வானாந்திரத்தில் தனி வீடுகட்டி சுதந்திரமாக வாழ்வோம் என்று கூறி விடை பெறுகிறான். பின் போலீஸிடம் சரணடை கிறான்.

ரோமனின் தோழி ஒரு இசை ஆசிரியை.இருவரும் சேர்ந்தே வாழ்கின்றனர். விசாரணை வளையத்துக்குள் சிக்கிய  ரோமன், அதனை தைரியமாக எதிர்கொள் கிறான்.இருப்பினும் டாலர்களை வீட்டில் பதுக்கி வைக்க பயப்படுகிறான். எனவே, மோரனை சிறையில் சந்திக்கிறான்.அவனும் ரோமனை சாந்தப்படுத்தி டாலர்களை, அவ னது காதலியைச் சந்தித்த மலைப் பகுதி யில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் பாது காப்பாக வைக்கச் சொல்கிறான். அப்போ தும் அவனது காதல் விபரத்தை ரோமனி டம் சொல்லவில்லை. ரோமனும்,மோரன் சொன்ன குறிப்பிட்ட பாறையிடுக்கில் டாலர்களை பதுக்கி வைக்கி றான். இவ்வேலை முடிந்து ரோமன் திரும்புகை யில், நோர்மாவை எதேச்சையாக சந்திக்க,  இப்போது இவர்களுக்குள்ளும் காதல் மலர்  கிறது. நோர்மாவும் பழைய மோரனுடனான காதலை இவனிடம் மறைக்கிறாள். மோரன் மூன்றரை ஆண்டுகளில் விடு தலை அடைந்தானா? முக்கோண காதலின்  நிலை என்ன?ஒப்பந்தப்படி டாலர்களை இரு வரும் பிரித்துக் கொண்டனரா? விரும்பிய விடுதலை மோரனுக்கு கிடைத்ததா?என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஏற்புடைய விடைகள் தரப்படுகிறது.

சிறைக் கைதிகளுக்கு பலதரப்பட்ட புத்த கங்களை வழங்கி படிக்க வைப்பதும், கவிதை  புத்தகத்திலிருந்து வாழ்வு பற்றிய கவிதை களை மோரன் படிக்க பிறக்கைதிகள் கவன மாக கேட்பது என்பது லத்தீன் அமெரிக்க நாடு களின் இலக்கிய ரசனையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. ரோமனிடம், நோர்மா “சிக்காடஸ் என்ற  வண்டு, சப்தம் (ராகம்)எழுப்பி தனது இணை யரை இனப் பெருக்கத்திற்கு அழைக்கு மென்றும், நிலத்தடியில் பதினேழு ஆண்டு கள் வரை வேனிலுறக்க நிலையில் வாழக்  கூடியது” என்றும் கூறுகிறாள். டாலரை, வண்டோடு ஒப்பிட்டுக் கதையின் போக்கை இந்த உரையாடல் எளிதாகப் புரிய வைக்கிறது.  மோரன் தான் கொள்ளையடித்த டாலர்  நோட்டு கட்டுகளை,காதலி நோர்மாவுக்காக செலவழிக்கையில், இரு விரல்களை இரு பக்கமும் நடனமாடுவது போல் அசைத்து எண்ணுவது ரசிக்கக் கூடியது. படத்தின் சிறப்பு என்றால் அது  ஒளிப்பதிவே.காலை,அந்தி மாலை, இரவில், பெரு மலை மேய்ச்சல் வெளியை படம் பிடித்த  விதம் அழகு. அலெஜோ மேக்லியோ மற்றும்  இன்ஸ் டீயோகாஸ்ட்லோ ஆகிய இரு  ஒளிப்பதிவாளர்களும் பாராட்டுக்குரி யவர்கள். 

டேனியல் எலீஸ் மோரனாகவும், எஸ்டீபான் பிக்லியார்டி ரோமனாகவும், மார்கரிதா நோர்மோவாகவும் தெளிவான நடிப்பைத் தந்துள்ளனர்.நல்ல இசை மற்றும் கச்சிதமான படத்தொகுப்பு. அர்ஜெண்டினாவின் ரோட்ரிகோ  மொரினோ இப்படத்தை சிறப்பாக  திரைக்கதை எழுதியும், இயக்கியு முள்ளார்.1993லிருந்து அர்ஜெண்டினா திரைப்பள்ளியில் இயக்கம் மற்றும் திரைக்கதை குறித்த வகுப்பெடுத்தவர். இப்படம் 2023ம் ஆண்டுக்கான கேன்ஸ் உலகப்பட விழாவிற்கு அன் ஷேர்டன் ரிகார்ட்  (Un Certain Regard) பிரிவிற்கு பரிந்து ரைக்கப்பட்ட படம். 2024 ஆஸ்காருக்கு சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அர்ஜெண்டினா நாட்டின் நுழைவுப் படம் என்ற பெருமை யையும் பெற்றுள்ளது. இப்படத்தின் பாதிப்பு துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கரில் நன்றாகவேத் தெரி கிறது. 

ரோமன் தனது தோழியை பிரிந்து, வேலையையும் விட்டுவிட்டு பாறைக்கு அடியில் உள்ள டாலர்களை எடுக்க முடியா மல் அங்கேயே இரவு பகலாக காவல்  காக்கிறான். நோர்மா, தனது முன்னாள்  இருக்காதலர்களும் வங்கிக் கொள்ளை யர்கள் என்பதை அறிந்த பின்,மோரனை பைத்தியம் என்றும்,ரோமனை பரிதாபத்துக் குரியவன் என்றும் இகழ்ந்து,இருவரையும் விட்டு விலகிச் சென்று விடுகிறாள். விடு தலையான மோரனோ,கொள்ளையடித்த டாலர்களை மறந்து,காதலி விட்டுச் சென்ற  குதிரையிலேறி மலைப் பகுதியில் அவ ளைத்தேடி அலைகிறான்.புல்வெளியிலி ருந்தும் கேமரா சட்டகத்திலிருந்தும் தேடிக்கொண்டே அவன் வெளியேறு கையில்,

“விடுதலை எங்கே என்று 
என்னை நானே
கேட்டுகொள்ளாத நாளில்லை;
அவர்கள் அதை
எங்கோ ஓரிடத்தில் வைத்திருக்க வேண்டும்
அங்கே நாம் செல்ல வேண்டும்
வேதனைகள் சோதனைகள் தாங்கி
சென்றடைய வேண்டும்
எவராலும் நம்மைத் தடுக்க
ஒருக்காலும் முடியாது;
முடியவே முடியாது.
என்னைக் குண்டுமாரி பொழிந்து 
கொல்ல முயன்றார்கள்;
கிறுக்குப்பிடித்த அந்த அதிமேதாவிகளிடமிருந்து
நான் தப்பிக்கவே விரும்பினேன்.
ஒருக்காலும்
ஆம்
ஒருக்காலும் இத்தகைய
வேதனைகள் சோதனைகளை
தாங்கி வந்த நம்மை
தடுப்பது இயலாது;
முடியவே முடியாது.”

என்ற பாடல்வரிகளோடு படம் நிறை வடைகிறது. பேரன்பின் தேடலே, மெய்யான  விடுதலைக்கானத் தேடலாகும் என்பதையே இறுதிக் காட்சி உணர்த்துகிறது. இப்படம் முபியில் உள்ளது.