சென்னை
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.
கொரோனா குறித்து பேட்டியளிக்க வந்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பெருவாரியான நேரத்தை "தமிழக முதல்வர், மாண்புமிகு, கனிவோடு" என்று கூறி நேரத்தை கழித்தார்.தமிழக கொரானோ நிலவரம் குறித்து தினம்தோறும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்து வந்தார். திடீரென அவருக்குப் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று தமிழக தலைமைச் செயலாளரே களத்தில் இறங்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். பீலா ராஜேஷ் ஒரங்கட்டப்பதற்கான காரணம் தெரியவில்ல.
தலைமைச் செயலாளர் கூறியதாவது:-
வெள்ளிக்கிழமை 77 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனோ பாதித்தவர்கள் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எட்டாக இருந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு ஒன்பதாக அதிகரித்துள்ளது.72 பேரும் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து பரவியது தான். வெளியிலிருந்து பரவவில்லை. severe acute respiratory infection (SARI) மூலம் 72 சாம்பிள்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில் 66 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஐந்து பேரின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளரிடம் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது குறித்து ஆய்வு செய்த மருத்துவக்குழுவினர் கொரானோ கட்டுப்பாட்டிற்குள் வருவதற்குள் ஊரடங்கை விலக்கிக்கொள்வதால் பலனில்லை என்று கூறியிருக்கின்றனர். வெள்ளியன்று முதல்வர் பிரதமர் மோடியுடன் காணொலிக்காட்சியில் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்ற அவர், மூன்றாம் கட்டத்திற்கு கொரோனா செல்லவில்லை. இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளது என ஆறுதல் கூறி விடைபெற்றார்.பேட்டியளித்த நேரங்களில் வாய்ப்பு கிடைத்த நிமிடங்களிலெல்லாம் கொரோனாவுக்காக முதல்வர் அறிவித்துள்ள திட்டம், நிவாரணம் குறித்து புகழ்ந்து தள்ளினார்.