tamilnadu

பட்டியலின மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமை ஆசிரியருக்கு ஊக்கத் தொகை....

சென்னை:
கல்வித் தொலைக்காட்சியில் சிறப்பாகப் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது, பட்டியலின மாணவர்களை அதிகம் சேர்க்கும் தலைமை ஆசிரியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:-

அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். 2021-22ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அதில் உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். 1 கிலோ மீட்டர் தொலைவில் தொடக்கப் பள்ளிகளும், 3 கிலோ மீட்டர் தொலைவில் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

450 மாணவர்களை சேர்த்த ஆசிரியர்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியஅரசுப் பள்ளிகளில் 1125 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம் நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 மாணவர்களைச் சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்தும் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அரசுப் பள்ளியை நாடுகிறார்கள். அவ்வாறு வரும் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.கல்வித் தொலைக்காட்சியில் பாடத்திட்டங்கள் நடைபெறுகின்றன என்ற தகவல்களை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.  பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பறைகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும்.பள்ளிக் கல்வி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் பட்டியலின மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப் பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும்.