tamilnadu

உதய் திட்டத்தால் மின்துறையில் ரூ.1,34,119 கோடி கடன்: அமைச்சர்....

சென்னை:
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் கடந்த 10 ஆண்டுகளில் 7 வருடங்கள் நட்டத்தை சந்தித்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த எரிசக்தி துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில்,“ உதய் திட்டத்தால் தமிழக அரசு ரூ.22815 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும் 31.3.2021 வரை ரூ.1,34,119.94 கோடி கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் கடன் 31.3.2021 வரை ரூ.25568.73 கோடி நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் கடந்த 10 ஆண்டுகளில் 7 வருடங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக 31.3.2021 வரை ரூ.6782.35 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வருவாய் இழப்புகள் ரூ.1778.17 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஒரு லட்சம் மின் இணைப்புகள்
மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்புகள் வழங்கப்படும்.தமிழகம் முழுவதும் 4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மற்றும் 2,000 மெகாவாட் திறனுள்ள மின்கலன் சேமிப்பு திட்டத்துடன் கூடிய சூரிய மின் சக்தி பூங்கா தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியான சாத்தியக்கூறு அடிப்படையில் நிறுவப்படும்.தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழ்நாட்டில் கிடைக்கும் அபரிதமான சூரிய சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் சூரிய மின்சக்தி பூங்கா மாவட்டம்தோறும் மாநகராட்சி நகராட்சி பகுதிகள் நீங்கலாக நிறுவப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, தேனி மாவட்டம் மணலாற்றில் தலா 500 மெகாவாட் நீரேற்று சேமிப்பு புனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் என் ஊரில் 2000 மெகாவாட் அளவிற்கு சிறிய அளவிலான திறன் கொண்ட 18 முதல் 20 மெகாவாட் அதிக எண்ணிக்கையிலான எரிவாயு மின் திட்டங்கள் குறித்து சாத்தியக்கூறுகள் பின் அதன் அடிப்படையில் நிறுவப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.