சென்னை:
விதி முறைகளுக்கு மாறாக பள்ளிகள், கோவிலுக்கு அருகில் மது கடைகள் செயல்படுவதை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தவிர கூடுதல் நேரத்தில் மது கடைகளை திறந்து வைக்க கூடாது. கூடுதல் விலைக்கு மது விற்றால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி இருக்கிறோம்.எந்த கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றாலும் அதற்கு அந்த மாவட்ட மேற்பாளர்தான் பொறுப்பு என்று கூறி இருக்கிறோம். அனைத்து மது கடைகளுக்கும் முன்னால் விலை பட்டியல் வைக்கப்படும். அதற்கு கூடுதலாக விற்கப்பட்டால் அந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நம்மை பொறுத்தவரை வருவாய் நோக்கம் அல்ல. அரசுக்கு நல்ல பெயர் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று அவர் கூறினார்.மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்க படுவது குறித்த கேள்விக்கு? கடைகள் குறைப்பது என்பது கொள்கை ரீதியான முடிவு. வரக்கூடிய காலங்களில் நிர்வாகத்தினை எப்படி செயல்படுத்துவது என்று முதலமைச்சர் எங்களுக்கு கூறுவார்.
வரக்கூடிய காலங்களில் துறையில் என்னன்ன குறைபாடுகள் உள்ளதோ அதனை ஆய்வு கூட்டங்களில் ஆலோசிப்போம் என்று கூறிய அவர், விதி முறைகளுக்கு மாறாக பள்ளிகள், கோவிலுக்கு அருகில் மது கடைகள் செயல்படுவதை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.பொதுமக்களிடம் இருந்து வரும் புகாருக்கு அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற புகார்கள் வந்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.