திருவண்ணாமலை, ஜூன்.23- திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியில், இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அருட்ஜோதி சித்த மருத்துவ சாலை இணைந்து நடத்திய மூலிகை கண்காட்சி, வேங்கிக்காலில் நடைபெற்றது. கலாச்சார, பாரம்பரிய மருத்துவ கவுன்சில் தேசியச் செயலாளர் ஜெயமுருகன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற முகாமிற்கு, சென்னை மண்டல செயலாளர் சி.எம்.ஹாஜா தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் பூபாலன், மாவட்டத் தலைவர் டி.சி.அண்ணாமலை, செயலாளர் ஆர்.தங்கராஜ், துணைத் தலைவர் ஆர்.வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் மகளிருக்கான இலவச மருத்துவ ஆலோச னைகள் வழங்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் இந்த மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாரம்பரிய மூலிகைகளின் தன்மை மற்றும் பயன்பாடு குறித்து, சித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். முகாமில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜூலை மாதம் மதுரையில் நடைபெற உள்ள கலாச்சார பாரம்பரிய மருத்துவ பெருவிழாவை முன்னிட்டு, இயற்கையை காப்போம், பாரம்பரியம் மீட்போம் என்ற கருத்தை மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில், அகில இந்திய அளவில், சுமார் 10 கோடி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.