வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புத னன்று (நவ.27) காலை 8.30 மணி அளவில் இலங்கை – திரிகோண மலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புது வையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையி லிருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டி ருந்தது. இது வடக்கு - வடமேற்கு திசை யில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத் தில் ‘பெங்கல்’ புயலாக வலுபெறக் கூடும். அதன்பிறகு, மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கட லோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கட லோரப்பகுதிகளை நோக்கி நக ரக்கூடும். அநேகமாக பெங்கல் புயலா னது, சென்னைக்கும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கும் இடையே நவம்பர் 30-ஆம் தேதி கரையைக் கடப்ப தற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன்றும் கனமழை தொடரும்
இதன் காரணமாகை டிசம்பர் 3 வரை தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், வியாழக் கிழமையன்று (நவ. 28) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங் களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை, கடலூர், நாகை ஆகிய துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக் குடி, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மீட்புக் குழு
பேரிடர் நிலைமைகளை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு சென்றுள்ளது. தலா 30 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த குழு வினர் தயார் நிலையில் உள்ளனர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதி களில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடை யிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரெட் அலர்ட்
புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து
தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள், பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை நெருங்கிக் கொண்டி ருக்கும் புயல் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கிறது. இது புயலாக மாறி கரையை கடப்பதற்கு நான்கு ஐந்து நாட்கள் ஆகும் என்றும், இதனால் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அரசும் பேரிடர் மேலாண்மை துறையும் தொடர்ந்து நிலைமைகளை கண்காணித்து வருகிறது. மேலும் முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்தி முடுக்கி விட்டுள் ளார்.
மயிலாடுதுறையில் 3 நாட்களாக வீட்டிலேயே முடங்கிய மக்கள்
காவிரி பாசனப் பகுதி மாவட்டங் களில் கடந்த 3 நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிக மான படகுகள், விசைப் படகுகளை கரை யோரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மீனவர்களும் வீடுகளில் முடங்கினர்.
பல்வேறு கிராமங்களில் குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். திருக்களாச்சேரி ஊராட்சி, பாலூர் கிராமம், தெற்கு தெருவில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரிய பழமையான அரண்மனை போன்ற வீடு கனமழை காரணமாக புதனன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.
மயிலாடுதுறை ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்நிலையில், வெள்ளப் பாதிப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, “மயிலாடு துறை மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 11 புயல் பாது காப்பு மையங்கள், 362 தற்காலிக நிவாரண மையங்கள், 146 திருமண மண்டபங்கள், 68 சமுதாய கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே, மீனவர்களுக்கு மழை தொடர்பான எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டதால், அவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 4500-க்கும் மேற்பட்ட முதல் நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட கட்டுப்பாட்டு மைய தொலை பேசி எண்:04364-222588 மற்றும் 1077 என்ற எண்ணை அழைத்து, மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் 1,500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகளை வேத னைக்கு உள்ளாக்கி உள்ளது.
ஒரத்தநாடு பகுதியில் தலையா மங்கலம், குலமங்கலம், நெய்வாசல் தென்பாதி உட்பட சுற்றுப் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ள னர். அம்மாப்பேட்டை, புத்தூர், அருந்த வபுரம், கம்பர்நத்தம் பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பயிர்கள் சுமார் 500 ஏக்கர் அளவிற்கு நீரில் மூழ்கியுள்ளன.
10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
இதேபோல் பாபநாசம் தாலுகா பண்டாரவாடை, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டப்பயிரான வெற்றிலை சுமார் 12.5 ஏக்கர் அளவில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சேதுபாவாசத்திரம் பகுதி மல்லிப் பட்டினம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக் கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதியில் 300 விசைப்படகுகளும், 3500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் 2 நாட்களாக கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடித் தொழிலை நம்பியிருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வருமானத்தை இழந்துள்ளனர்.
திருவாரூரில் 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா 2,61,464 ஏக்கரும், தாளடி பயிர் 91,849 ஏக்கரும் பயிரிடப்பட்டுள்ள நிலையில், இதில் சரி பாதிக்கு மேல் குறிப்பாக 1,48,200 ஏக்கருக்கு மேல் மழை நீரால் சூழப்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி போன்ற பகுதிகளில் சம்பா பயிர்கள் முழு வதுமாக சேதமடைந்துள்ளன. மேலும் நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் திருவாரூர் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன.
வலங்கைமான் ஒன்றியத்தில் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ராமப்பா தோட்டம் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. திருத்துறைப்பூண்டி 6 ஆவது வார்டில் நரிக்குறவர்கள் காலனி முற்றிலும் பாதிக்கப்பட்டதால், இப்பகுதி மக்கள் முகாமில் தங்கியுள்ளனர். குட வாசல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டு கட்டடத்தின் மேல்புறம் மழை நீர் கசிந்து, கீழ் தளம் முழுவதும் நீர் பரவியுள்ளது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
கனமழை பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு நிவாரணமாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். கால்நடை பாதிப்புகளை கணக்கிட்டு உரிய முறையில் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் ஆய்வு
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரி முத்து ஆகியோர் நேரில் ஆய்வு மேற் கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர், “இதுவரை நாங்கள் ஆய்வு மேற்கொண்டதில் ஏறத்தாழ 200 முதல் 300 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கலாம் என கருதுகிறோம். எங்களின் ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கவுள்ளேன்” என்றார்.