சென்னை, நவ. 27 - பல்லாயிரம் கோடி லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கையும் களவுமாக சிக்கி யுள்ள அதானியை உடனடியாகக் கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ள தால் இதுதொடர்பான முழு விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கூடுதலான கட்டணத்தில் அதானி நிறுவனத்துடன் மின்சார கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள்- ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும் என்றும், இதில், கட்சி அணிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு வலுவான கண்டனம் முழங்க வேண்டும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி வியாழனன்று தமிழகம் முழுவதும் மாவட்ட - ஒன்றியத் தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு கின்றன.