சென்னை:
அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களதுபிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று தமிழக அரசுக்கும்முதல்வருக்கும் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் நெ.இல.சீதரன், பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி 2 ஆம் தேதியிலிருந்து மறியல் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வரு கின்றனர். இந்த கோரிக்கைகள் குறித்து சில ஆண்டு காலமாகவே அரசு ஊழியர் சங்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தி அரசின்கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனாலும் அரசு அவர்களை அழைத்துப் பேசாமல் அலட்சியப்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் இந்த போக்கு பிரச்சனைக்கு தீர்வாக அமையாது; மேலும் சிக்கலாக்கவேஉதவும். பலகட்ட மாநாடுகள் பிரச்சார இயக்கங்கள், போராட்ட ஆயத்த மாநில மாநாடு இவை அனைத்தும் அரசு ஊழியர் சங்கம் சில மாதங்களாகவே நடத்தி வருகிறது. அரசுக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறது. ஆனாலும் அரசின் அலட்சியப் போக்கு தொடர்வது கவலையளிக்கின்றது. மேலும் ஏற்கனவே கடந்த போராட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய போராட்டத்தின் வீச்சின் காரணமாக தமிழக அரசு தன்னிச்சையாக ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற்றுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு போராடுகின்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதை விடுத்துஅவர்களை கைது செய்து தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. எனவே உடனடியாக அவர்களை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்க்க தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் தமிழக அரசையும் முதல்வரையும் கேட்டுக்கொள்கின்றது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.