சென்னை:
புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வக நுட்பனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவஆய்வக நுட்பனர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசு விருதுநகர், இராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்டு 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தொடங்க உள்ளது. இங்கு ஆய்வக நுட்பனர் பணியிடங்களை மட்டும் அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப அரசாணை வெளியிட்டுள்ளது. இதை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் நியமிக்க அரசாணை வெளியிட வேண்டும்.கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம்ஊக்கத்தொகையாக வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட ஆய்வக நுட்பனர்களுக்கு அரசுஅறிவித்தபடி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.23) சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநிலத் தலைவர் மா.செல்வகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு,மாவட்டச் செயலாளர்கள் மா.அந்தோணிசாமி (வடசென்னை), ந.வினோத்குமார் (தென்சென்னை), நுட்பனர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கோ.சுகுமார், பொதுச் செயலாளர் வீ.பார்த்தசாரதி, பொருளாளர் நா.சங்கர், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.ந.நம்பிராஜன் உள்ளிட்டோர் பேசினர்.