தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை நாளை முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை தமிழ்நாட்டில் 6 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் கொடுக்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் பல இடங்களில் பொதுமக்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் எஸ்ஐஆ பணிகளை நாளை முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உரிய திட்டமிடல், முறையான பயிற்சி, நிதி ஒதுக்கீடு செய்யாமலும், பணிகளுக்குத் தேவையான போதுமான பணியாளர்கள் இல்லாமல் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நிர்பந்திப்பதால் பணிச் சுமை ஏற்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று (17-11-25) மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, நாளை (18-11-25) மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
