கோவையில் அரசு பேருந்து இயக்கத்தில் சாதிய தீண்டாமை விவகாரத்தில் போக்குவரத்துத்துறை செயலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவையில் இயங்கி வரும் 21 என்ற எண் கொண்ட அரசு நகர பேருந்து மட்டும், சாதிய தீண்டாமை காரணமாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கெம்பனூரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பட்டியிலன மக்கள் வசிக்கும் பகுதியான அண்ணா நகருக்கு இயக்கப்படுவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பட்டியலின மக்கள் பகுதிக்கு பேருந்தை இயக்கினால், பேருந்து அங்கு இருந்து வரும் போது அவர்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்தும், அவர்கள் முன்பு நின்று கொண்டு வர வேண்டுமா? என்ற சாதிய நோக்கத்துடன் பேருந்து இயக்க மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஏற்கனவே, மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் மாவட்ட ஆட்சியரை, அண்ணா நகருக்கு செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் 21ஆம் எண் பேருந்தை இயக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு மாறாக போளுவாம்பட்டி செல்லும் 64சி என்ற பேருந்தை அண்ணா நகருக்கு இயக்கியும், சாதிய பிரச்னை இல்லை எனவும், அறிக்கை சமர்பித்து இந்த விவகாரத்தை மூடி மறைத்து உள்ளனர்.
ஆனால், 21 எண் பேருந்தை மட்டும், அண்ணா நகருக்கு இயக்கவில்லை எனவும், பின்புலத்தில் தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு, முட்டுக்கட்டை போடுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து 21 எண் பேருந்தை பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு இயக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த மாதம் புகார் அனுப்பிய நிலையில், தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து செயலருக்கும், தேசிய தாழ்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், அப்பகுதி மக்களுக்கு பேருந்தை இயக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
