தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்காததால் தேசிய புலனாய்வு முகமை (NIA) அவர்களை விடுவித்துள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிப்பை தற்கொலைப்படை தாக்குதல் என NIA உறுதி செய்து, புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய மருத்துவர் உமர் உன் நபியை முக்கிய சதித் திட்ட ஒருங்கிணைப்பாளராக அடையாளம் கண்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஹரியானாவின் நூஹில் அண்மையில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் ரெஹான், மக்மூத், முஸ்தகீம் மற்றும் உர விற்பனையாளர் தினேஷ் சிங்களா ஆகியோர், டாக்டர் உமருடன் முன்பு தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டனர். மூன்று நாட்கள் கடுமையான விசாரணை நடத்தப்பட்டபோதும், இவர்களை சம்பவத்துடன் இணைக்கும் டிஜிட்டல் தடமோ ஆவணப்பூர்வ ஆதாரமோ இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள்மீது கண்காணிப்பு தொடரும் என NIA தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை மிவாட் பகுதியில் இருந்து ஏழு பேர் விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்வர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கைவிடப்பட்ட மொபைல் போன்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், விசாரணை மிவாட் பகுதியில் மேலும் விரிவடைந்துள்ளது.
