சென்னை:
முதல்வர் செல்லும் பாதையில் பெண் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவதிலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது. இதற்கான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக முதல்வர்களாக இருந்தவர்கள் சாலைகளில் செல்லும்போது பாதுகாப்பு வசதிகளை அளிப்பது எம்ஜிஆர் காலத்துக்குப் பின் அதிகரிக்கப்பட்டது. ஜெயலலிதா மிகக்கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டார். வழியெங்கும் போலீஸார் நிறுத்தப்பட்டனர்.எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும் அவர் சாலையில் போவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பு வழி நெடுகிலும் வழிக்காவல் போலீஸார் என நூற்றுக்கணக்கானேர் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டனர். இதனால் பெண் போலீஸார் மிகுந்த சிரமப்பட்டனர். குடிக்கத் தண்ணீர் இல்லாமல், இயற்கை உபாதைக்கு ஒதுங்க முடியாமல், சாப்பாடு சரிவரக் கிடைக்காமல், உடல் நலக்கோளாறு இருந்தாலும் பல மணி நேரம் நிற்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.
இதில் பெண் போலீஸாருக்கு விலக்கு வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வந்தது. இந்நிலையில் இந்தக் கோரிக்கை முதல்வர் ஸ்டாலின் காதுக்குச் சென்ற நிலையில், முதல்வர் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததன் பேரில் வாய்மொழி உத்தரவாக பெண் காவலர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.