tamilnadu

img

மாற்றுத்திறன் அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் விலக்கு அளிக்க கோரிக்கை

சென்னை:
மத்திய அரசு வழிகாட்டுதலை பின்பற்றி மாற்றுத்திறன் அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பேரிடர் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். இதில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 100 விழுக்காடு பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பெருந் தொற்று பாதுகாப்பு காரணங்களால், மாற்றுத்திறன் ஊழியர்கள் பணிக்கு வருவதில் இதுவரை விலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய உத்தரவால் கண்டிப்பாக பணிக்கு வர
வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

இன்னும் வைரஸ் தொற்றின் அச்சம் முழுமையாக நீங்கவில்லை. பொதுப் போக்குவரத்தும் முழுமையான சகஜ நிலைக்கு வரவில்லை.  இதனால், மாற்றுத்திறன் ஊழியர்கள் பணிக்கு வருவதில் பல்வேறு கடும் சிரமங்கள் உள்ளன.  வைரஸ் தொற்று அபாயத்துக்கு எளிதில் உள்ளாக வாய்ப்புள்ளது.மேலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் எந்த மாற்றமும் இல்லை.  இதனால், மாற்றுத் திறன் ஊழியர்கள் மத்திய அரசு பணிக்கு வருவதில் விலக்கு நீடிக்கிறது என்பதை சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. மேலும், பாதுகாப்பு காரணங் களை காட்டி விலக்கு அளித்து வந்த தமிழக அரசின் நிலைபாடு தற்போது கேள்விக்குறியாகும்.எனவே, மத்திய அரசின் நிலைபாட்டை கருத்தில் கொண்டும், உடல் குறைபாடுகளால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசும் மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் விலக்கு அளிக்க முதலமைச்சர் உரிய உத்தரவுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.