சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை
சென்னை, ஜன.3- சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலை யத்தின் நுழைவு வாயில், கார் பார்க்கிங் மற்றும் மெட்ரோ இணைப்புப் பாதைகளில் தெருநாய்க ளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓடுதளப் பகுதிகளில் நாய்கள் புகுந்தால் விமான பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், இது குறித்துப் பயணிகள் இணையதளத்தில் தொடர் புகார்களை அளித்து வருகின்றனர். இதற்குப் பதிலளித்துள்ள விமான நிலைய நிர்வாகம், பயணி களிடம் மன்னிப்புக் கோரி யதுடன், பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்டு நாய்களைப் பிடிக்க விரை வில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
துறைமுகம் தொகுதியில் வளர்ச்சிப்பணிகள் அமைச்சர் ஆய்வு
சென்னை, ஜன.3- சென்னைத் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும், தற்போதைய பணிகளின் நிலை குறித்தும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். முடியும் தரு வாயில் உள்ள பணிகளை விரைவில் திறப்பது குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
ஆன்லைன் மோசடி: ரூ. 26 கோடி பணம் மீட்பு
சென்னை, ஜன.3- சென்னையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், 2025-ம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ. 25 கோடியே 97 லட்சம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த டிசம்பரில் மட்டும் 192 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு ரூ. 1.04 கோடி மீட்கப்பட்டுள்ளது. 1930 என்ற அவசர எண் மற்றும் இணையதளம் வாயிலாக பெறப்படும் புகார்கள் மீது நவீன தொழில்நுட்பத்துடன் துரித நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை, பொதுமக்கள் பணப் பரிமாற்றத்தில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏடிஎம் மற்றும் யுபிஐ வழியாக இபிஎப் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்
சென்னை, ஜன.3- இபிஎப்ஓ சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து நேரடியாக பணம் எடுக்கும் வசதியை ‘இபிஎப்ஓ 3.0’ திட்டத்தின் கீழ் வரும் மார்ச் 2026-க்குள் அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 32 வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும். ஓய்வூதிய சேமிப்பைப் பாதுகாக்கும் வகையில், கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீதம் வரை மட்டுமே எடுக்க அனுமதி அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பணம் எடுப்பதற்கான கால விரையம் தவிர்க்கப்படுவதோடு, யுஏஎன் மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட கேஒய்சி பூர்த்தி செய்த உறுப்பினர்கள் ஓடிபி அல்லது பின் மூலம் எளிய முறையில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
பெண்ணை மானபங்கப்படுத்திய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருவண்ணாமலை, ஜன.3- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், கடந்த 2019-ம் ஆண்டு மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, அவரை வழிமறித்த முத்துராஜ் (36) என்பவர் ஆபாசமாகப் பேசி, துப்பட்டாவைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த செய்யாறு குற்றவியல் நீதிமன்ற நடுவர் கே.ஆர்.பாலாஜி, முத்துராஜிற்கு 3 ஆண்டு மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து வெள்ளியன்று தீர்ப்பளித்தார்.
மெட்ரோ ரயில்: 2025-ஆம் ஆண்டில் 11.19 கோடி பயணிகள் பயணம்
சென்னை, ஜன.3- கடந்த 2015-ஆம் ஆண்டு சேவை தொடங்கப்பட்டது முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக 2025-ல் மட்டும் 11.19 கோடி பயணிகள் பயணித்துள்ள நிலையில், மொத்த பயணிகளின் எண்ணிக்கை 46.73 கோடியைக் கடந்துள்ளது; மேலும் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெறுவோருக்கு வழங்கப்படும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி இச்சாதனைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.'
எலும்புக்கூடாக மாறிய மின்கம்பங்கள் தொளவேடு ஊராட்சியில் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவள்ளூர், ஜன.3- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தொளவேடு ஊராட்சி யில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில், பள்ளி மாண வர்கள், விவசாயிகள் மற்றும் தொழி லாளர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, உட்புறக் கம்பிகள் வெளியே தெரிந்து பலவீனமாகக் காணப்படுகின்றன. விபத்து அபாயம் பலத்த காற்று வீசும் நேரங்களில் இந்த மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், உயி ரிழப்புகள் ஏற்படக்கூடும் என கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.பள்ளிக்குச் செல்லும் பாதையிலேயே இந்த அபாயகரமான கம்பங்கள் அமைந்துள்ளன. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாலவாக்கம் மின்வாரிய அலு வலகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி, சேதமடைந்த நான்கு மின்கம்பங்களையும் போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.