சென்னை:
இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டம், அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு திருத்த சட்டம், மற்றும் பண்ணை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்திடக்கோரி செவ்வாயன்று (ஜூலை 21) மாநிலம் தழுவிய அளவில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பாக்கி ரூ.405 கோடியை 15 சதம் வட்டியுடன் மாநில அரசு பெற்றுத்தரக் கோரியும் 2020-21ல் 9.5 பிழிதிறன் ஒரு டன் கரும்புக்கு ரூ.4500 மத்திய, மாநில அரசுகள் விலை வழங்க வேண்டும். 2019-20 ல் அரைத்த கரும்புக்கு மாநில அரசு ஊக்கத் தொகை ரூ.137.50 என்பதை ஒரு டன் கரும்புக்கு ரூ.400 ஆக உயர்த்தி வழங்கிடக்கோரியும் 2013-17 வரை 4 ஆண்டுகள் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கி ரூ.1384 கோடியை மாநில அரசு பெற்றுத்தரக் கோரியும் கூட்டுறவு ஆலையை மேம்படுத்தி அரவையை துவக்கிடக் கோரியும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டம், அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு திருத்த சட்டம், மற்றும் பண்ணை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்திடக்கோரி 20-07-2020 ல் 31 சர்க்கரை ஆலை பகுதிகளில் 125 இடங்களில் மாநிலம் தழுவிய அளவில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 4000 க்கும் மேற்பட்ட. கரும்பு விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஆண்டு முழுவதும் பாடுபட்டு கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பி விட்டு பணத்திற்காக காத்திருக்கிறோம். சட்டப்படி 14 நாட்களில் தரவேண்டிய கரும்பு பணத்தை அம்பிகா,ஆரூரான் ஆலைகள் 3 ஆண்டுகளாக தரவில்லை, தரணி ஆலைகள் பாக்கியை இரண்டு வருடங்களாக தரவில்லை நடப்பு ஆண்டில் பல மாதங்களாக தரவில்லை வாங்கிய கடனை கட்ட முடியாமல் புதிய கடன் வாங்க முடியாமல் குடும்ப செலவுகளுக்கும் பணம் இல்லாமல் விவசாயிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். விவசாயிகளின் நிலை உணர்ந்து கரும்பு பண பாக்கியை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துவதாக சங்கத்தின் தலைவர் என்.பழனிச்சாமி, பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.