districts

img

இழப்பீடு தராமல் மின் கம்பிகள் அமைக்கக் கூடாது: உயர் மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கோவை, மார்ச்.28 - உயர் மின் கோபுரம் அமைக்க இழப்பீடு தராமல் மின் கம்பிகள் அமைக்கக் கூடாது என கோவை கரும்பத்தம்பட்டியில் விவசாயிகள் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையம் கிராமத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், ஈங்கூர் வரை உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. உயர் மின் கோபுரங்கள் விவசாயிகள் நிலத்தில் செல்வதால் அவர்களுக்கு இழப்பீடு தருவதாக மின்சார வாரியம் தெரிவித்து அதற்கான விலை நிர்ணயத்தையும் செய்துள்ளது. ஆனால் இதுவரை அதற்கான இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. இந்நிலையில், எலச்சிபாளையத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் புதிதாக உயர்மின் கோபுரத்தை அமைக்க மின்சார வாரியம் முடிவு செய்து போலீஸ் பாதுகாப்புடன் அமைக்க முற்பட்டுள்ளனர்‌. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் வட்டாட்சியர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேசி உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.