தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேத விவரங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகாலைச் சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மழையில் முழுமையாகச் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்றும் சேதமடைந்த குறுவை, கார், சொர்ணவாரி பயிர்கள், முழுமையாகச் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்ய ஏதுவாக ஹெக்டர் ஒன்றுக்கு 6,038 மதிப்பில் இடுபொருள் தரப்படும் என்றும் குறுகிய கால விதை நெல் 45 கிலோ, நுண்ணூட்ட உரம் 25 கிலோ, யூரியா 60 கிலோ, டிஏபி உரம் 125 கிலோ வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.