states

img

ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷொரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பால தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த நவ.2 ஆம் தேதியன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற விரைவு ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியாகினர்.

பலியான 4 பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “இதுபோன்ற துரதிர்ஷ்டகரமான சம்பவங்களால், ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுபவர்கள் சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்காமல் இருப்பது தெரிய வருகின்றன.

பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒப்பந்த முறையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உறுதிசெய்ய தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பலியான ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை சார்பில் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.