சென்னை
நாட்டின் பல பகுதியில் பருவநிலை மாறுபட்டால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.குறிப்பாக வட மாநிலங்களில் தொடர் மழை பொழிகிறது. இதனால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நாள் ஒன்றுக்கு சாரசரியாக 60 லாரிகளில் வெங்காய வரத்து இருக்கும். ஆனால் கடந்த சிலநாட்களாக வெங்காய வரத்து வெறும் 15 லாரிகளுக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் கிலோ ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறைக் கடைகளில் சின்ன வெங்காயம் ரூ.200-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ஞாயிறன்று ஒரு கிலோ ரூ.85 வரை விற்கப்பட்ட நிலையில், திங்களன்று ரூ.5 உயர்ந்து கிலோ ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில்,"வரத்துக் குறைவு காரணமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் வெங்காயத்தின் விலை உயர்வது வழக்கமான ஒன்று தான். என்று கூறிய செல்லூர் ராஜு தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில்,"தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது"என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.