பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாகவே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பள்ளி,கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் பட்சத்தில் படிப்படியாக பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும்'என்று தனியார் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், கூறுகையில், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், தேர்வுகளை நேரடியாக நடத்துவதே உகந்ததாக இருக்கும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும். B.Arch., கலந்தாய்வில் தேர்வான மாணவர்கள் இன்று முதல் அவரவர் கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.