tamilnadu

img

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்....

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மைத்துறைக்கு என்று முதன்முதலாக தனி நிதி அறிக்கை ஆக.14 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு என்று இதுவரைக்கும் தனியாக ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தது கிடையாது. ஆனால், நீண்டகாலமாக அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இந்த கோரிக்கைகளை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது, வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றி அறிவித்தார்.
அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தனது தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற 100 நாளில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் ஆக.14 அன்று காலை 10 மணிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். 

தனது உரையின் துவக்கத்திலேயே, இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங் களை எதிர்த்தும் திரும்பப்பெற வலியுறுத்தியும் உறுதிமிக்க போராட்டத்தை தலைநகர் தில்லியில் மாதக் கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையை காணிக்கையாக்குவதாக கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.மனித குல வரலாற்றில் மூன்று புரட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதில் ஒன்று விழிப்புணர்வு, மற்றொண்டு வேளாண்மை, மூன்றாவது அறிவியல் புரட்சி.  பரிணாம வளர்ச்சியால், வெவ்வேறு இடங்களில் வேட்டையாடித் திரிந்த மனிதனை விளை நிலத்தில் ஊன்றி நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி.தோராயமாக பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த இந்தப் புரட்சியே மனிதனைப் பண்பட்டவனாக மாற்றியது. தன் உணவைத் தானே உற் பத்தி செய்துகொள்ளும் திறனை அடைந்ததும் அவன் சிந்திக்கத் தொடங்கினான்.  அப்போது கலைகள் பிறந்தன, கவிதைகள் தவழ்ந்தன, மாடங்கள் உருவாயின, குடும்ப அமைப்புகள் தோன்றின, நிர்வாகம் அமைந்தது, மனித வரலாறு பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியது. நிச்சயமில்லாத வாழ்க்கையிலிருந்து நிம்மதியான வாழ்க்கைக்கு அவனைப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்த்தது வேளாண்மையே என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.

இன்றைக்கு, மனித நாகரிகம் பன் மடங்கு உயர்ந்தாலும், விண்ணளவு வளர்ந்தாலும், உணவின்றி உயிர்வாழ இயலாது. பெருகி வரும் மக்கள் தொகைக்குப் பசியாற்றும் அமுதசுரபிகளாக மண்ணை மாற்றிக்காட்டும் மகத்துவம் பெற்றவர்கள் உழவர் பெருமக்கள். அவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் அரும்பெரும் நோக்கத்தோடு இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.வேளாண்மை என்பது வேளாண்மை, தோட்டக் கலை-மலைப் பயிர்கள், விதைச்சான்று-அங்ககச் சான்று, வேளாண்மை பொறியியல், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையையும், வேளாண் விற்பனை-வேளாண் வணிகம், சர்க்கரைத் துறையையும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தையும் உள்ளடக்கிய மாபெரும் தலைமைச் செயலக அங்கமாகச் செயல்பட்டு வருகிறது.

நாட்டுயர்வும்-கூட்டுறவும்
வேளாண்மையைத் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. மேழிச் செல்வம் என்று அழைக்கப்படுகிற கால்நடைகளையும், பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களையும், முசுக்கொட்டையில் உருவாகும் பட்டு வளர்ச்சியையும் வேளாண்மைக்குள் அடக்குவதே பொருத்தம். வேளாண்மை செழித்து ஓங்க நாட்டுயர்வைத் தரும் கூட்டுறவுத் துறையும் முக்கியம். ஊரக வளர்ச்சியின் சீரான பங்களிப்பும் தேவை. வருவாய்ப் பேரிடர் மேலாண்மைத் துறையின் கடைக் கண் பார்வையும், நிலங்களை முறையாகப் பராமரிக்க கட்டாயம் அவசியம்.

உணவுத் துறையின் செயல்பாடு இருந்தால்தான் உற்பத்தி செய்த உபரியை விற்பனை செய்ய இயலும். நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம்தான் தமிழக மக்களுக்கு உணவுவிநியோகம் நிகழ்த்த இயலும். நீர்வள ஆதாரம் இருந்தால்தான் வரப்புயரும்போது நீர் உயரும். எரிசக்தி கிடைத்தால்தான் மண்ணுக்கு அடியில் இருக்கும் நீர் வயல்களில் சீறிப்பாயும்.எனவே இத்தனை துறைகளும் மண்ணுக்கு மருதாணி பூசி நிலத்தில் மரகதப் போர்வை போர்த்தி அழகு பார்க்கும் வேளாண் துறைக்கு ஒதுக்கும் நிதிப் பங்களிப்பையும் இணைத்தே இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை என்பதையும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மக்களாட்சி மாண்புக்கு விரோதமாக, தனித்து முடிவெடுத்து அறிவித்து செயல்படுத்தும் போக்கைக் கடைப் பிடிக்காத மகத்துவம் கொண்டது திமுக அரசு. எனவே நிதிநிலை அறிக்கை ஒன்றை வேளாண்மைக்கென்று தனியே தாக்கல் செய்ய வேண்டும் என்றதும் முதலமைச்சர், பாசனநீர் பாய்வதற்கு முன்பே தங்கள் வியர்வையால் வயல்களை விளை நிலமாக்கிய விவசாயப் பெருமக்களை அழைத்து கருத்துகளை எல்லாம் உள்வாங்கி, அதற்குப் பின்னரே இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை உருவாக வேண்டும் என்று உத்தரவு அளித்தார். அதன் அடிப்படையில் பல மாவட்டங்களுக்குச் சென்று உழவர் பெருமக் களை அழைத்து அவர்கள் உணர்வுகளுக்கெல்லாம் ஒற்றடம் கொடுக்கும் வகையில் எங்கள் காதுகளை இரவல் தந்து, மனத்தை அவர்களிடம் ஒப்படைத்து, ஆலோசனைகள் நிகழ்த்தப் பட்டன.

துறையின் அமைச்சர் என்கின்ற மாபெரும் பொறுப்பைத் தோள்களில் தாங்கியிருக்கிற நான், அரசு அலுவலர்களுடன் 18 மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி பகுதிகளில் கேட்டறிந்தேன்.உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துக்கள் காணொலிக் காட்சி மூலம் கேட்டறியப்பட்டன. மேலும், வேளாண் ஏற்றுமதியாளர்கள், வேளாண் வணிகர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது.  அதுமட்டுமல்லாமல், நிதி -மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருடன் இணைந்து அனைத் துத்தரப்பு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோரின் கருத்துக் களும் கேட்டறியப்பட்டன.தொடர்ந்து, விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சென் னையில் கூட்டம் நடத்தி, கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இக்கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத விவசாயிகள் தங்கள் கருத்துக்களை “உழவன் செயலி” வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவித்தனர்.

மேலும், தலைமைச்செயலர் அவர் கள் உழவர்நலன் தொடர்புடைய அனைத்துத் துறைத் தலைவர்களுடனும் கலந்து ஆலோசித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அதனடிப்படையில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக 2021-2022 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

                               ***************

வேளாண்துறையில் தொலைநோக்குத் திட்டம்

நிதிநிலை அறிக்கையை வேளாண்மைக்கென்று தனியாகத் தாக்கல் செய்வது ஓர் உயர்ந்ததொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது. தொலை நோக்குப் பார்வை வேறு, பகல் கனவு வேறு. விழிப்புணர்வால் விளைவது தொலைநோக்குப் பார்வை. பகல் கனவு என்பது எட்டாத ஒன்றுக்கு ஆசைப்படுவது.

உணவுத் தன்னிறைவைத் தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது என்று நம் உற்பத்தித் திறனை வைத்து உறுதிசெய்ய இயலும். நாம் உணவுப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.மாவுச்சத்தை மட்டுமே வழங்கும் உணவு தானியங்களோடு நின்றுவிடாமல், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றையும் வாரிவழங்கும் பால்வளம், மீன்வளம், காய்கனிகள் பெருக்கம் ஆகியவற்றையும் ஊக்கப்படுத்தி தமிழகத்து இளைஞர்களை, நிமிர்ந்த தோள்கள் கொண்டவர்களாக, நேர்கொண்ட பார்வை உள்ளவர்களாக மாற்றுவதே ஊட்டச்சத்துப் பாதுகாப்பின் நோக்கம். இந்த நோக்கத்தை மையமாக வைத்து அதை அடைய இலக்குகளை வகுப்பது இன்றியமையாத செயல்பாடு. அதற்காக, மூன்று தொலை நோக்குத் திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட, குளங்கள், பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க் குட்டைகள், தடுப்பணைகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர் ஆதாரங்களைப் பெருக்கி, பத்தாண்டுகளில், தற்போது தரிசாக உள்ள நிலங்களில் 11.75 லட்சம் ஹெக்டர் பரப்பில் குறைந்த நீர் செலவில் சாகுபடி செய்யக் கூடிய சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி மற்றும் பழப்பயிர்களை பயிரிட்டு நிகர சாகுபடிப் பரப்பு 75 விழுக்காடாக உயர்த்தப்படும்.10 லட்சம் ஹெக்டர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக, அதாவது, 20 லட்சம் ஹெக்டராக  உயர்த்தப்படும்.மாமன்னன் கரிகால்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியின் குறுக்கே கல்லணையை அமைத்து, ஓடும் காவிரியை, தவழச்செய்து வீணாகும் நீரினை ஏரி, குளங்களில் சேமித்து வாய்க்கால் வழியாக நீரினை எடுத்துச்சென்று,  வேளாண்மையைத் தழைத்தோங்கச் செய்தது போல, புதிய நீராதாரங்களை உருவாக்கியும், பெருமளவு நுண்ணீர்ப் பாசன தொகுப்புகளை உருவாக்கியும்,  தற்போதுள்ள  10 லட்சம் ஹெக்டர் இருபோக சாகுபடி பரப்பினை, குறுகிய கால சிறுதானிய பயிர்கள், பயறு வகைப் பயிர்கள், பருத்தி, எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவைகளைப் பயிரிட்டு, பத்தாண்டுகளில் 20 லட்சம் ஹெக்டராக அதிகரிக்கப்படும்.

உணவு தானியங்கள், தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும். பயிர் உற்பத்தித்திறனை அதிகரிக்க, தரமான விதை, நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து, உணவுதானிய பயிர்கள், தென்னை, கரும்பு, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பெற்றிட வழிவகை செய்யப்படும்.

                               ***************

வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்கள்

விளை நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறியதால் குறைந்து வரும் சாகுபடிப் பரப்பு, மங்கி வரும் மண்வளம், அதிகம் சுரண்டப்படுவதால் பற்றாக்குறையாகும் நீர்வளம், வேளாண் தொழிலை மேற்கொள்ள முன்வர இளைஞர்களிடம் தென்படும் ஆர்வமின்மை, கட்டுபடியாகும் விலை கிடைக்காத விளைபொருட்கள், சாகுபடிக்காகும் அதிகத் தொகை, அறுவடைக்குப் பின் உண்டாகும் இழப்பு என்கிற கடின சுமைகளை உலகைச்  சுமந்துகொண்டிருக்கும் ‘அட்லசைப்போல’ உழவர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருங்கிணைந்த வளர்ச்சி
மலையளவு குவிந்திருக்கும் சோற்றையும் ஒவ்வொரு வாயாக உண்டால் தின்றுமுடிக்க முடியும் என்பதுதான் சாத்தியக்கூறு. மலையளவு தோன்றும் இந்த இலக்குகளை ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்கின்ற பொன்மொழிக்கு ஏற்ப பல்வேறு கட்டங்களாக வகுத்தும், பகுத்தும், தொகுத்தும் இந்தத் துறை, இந்த நிதிநிலை அறிக்கையில் கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம், மானாவாரி நில-தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரித்தல்.சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணைய முறையை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்துதல், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்தினை விரிவுபடுத்துதல், பயிர் விளைச்சலை அதிகரிக்க பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை பரவலாக்குதல்.

வேளாண்மையில் மகளிருக்கு முக்கியத்துவம் அளித்தல், விவசாயிகளை வேளாண் வணிகராக்குதல், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல், வேளாண்மையில் தகவல் தொழில்நுட் பத்தினை மேம்படுத்தி விவசாயிகளுக்கு பகுதிசார்ந்த வேளாண்  தகவல் வழங்குதல், வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்.விளைபொருட்களை  மதிப்புக்கூட்டுதல், பாதுகாக்கப்பட்ட சூழலில் காய்கறிகள், மலர்கள்  உற்பத்தியினை ஊக்குவித்தல், குறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கு உகந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்தல், வேளாண்மையில் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் அடையும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றார் அமைச்சர்.