அனுமதியின்றி மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் ரூபா அபராதம்
சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை சென்னை, ஜன. 10- பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற விரும்புவோர் இனி வனத்துறையிடம் செல்லத் தேவையில்லை; வரும் திங்கட்கிழமை (ஜன. 12) முதல் மாநகராட்சி இணையதளம் மற்றும் ‘நம்ம சென்னை’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் மாநகராட்சி பூங்கா கண்காணிப்பாளர், சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கள ஆய்வு செய்து பசுமைக் குழுவிற்கு அறிக்கை அனுப்புவார்கள். அனுமதியின்றி கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் வைத்தல் போன்ற செயல்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
