சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும்வகையில் ஊரடங்கு வருகிற 21 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், தமிழகத்தில் மேலும்சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு இம்மாதம் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில்இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், இந்த ஊரடங்கு வரும் ஜூன் 21 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், ஜூன் 19 அன்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும்அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து,மக்களின் உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும்,இந்த ஊரடங்கை ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடுஅரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங் கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம்,கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.இந்த மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்தளர்வுகளும், கூடுதலான செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தலைநகர் சென்னை அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்படத் துறையினர் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.மேலும், திருமண நிகழ்வுகளுக்கு வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பதிவு பெற்று பயணம் செய்யலாம். இதற்கான இ-பதிவு திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிட மிருந்து இ-பதிவு பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.