districts

img

என்ன சாதி என்று கேட்டு பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ததீஒமு வலியுறுத்தல்

பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினரை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்ட தலைவர் முத்துகுமார் மற்றும் மாவட்ட செயலாளர் கே.முருகன் ஆகியோர் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், புதுக்கோட்டை (அஞ்சல்), எரிச்சநத்தம் (வழி), பி.பாறைப்பட்டி கிராமம், அசைபா காலனி என்கிற முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செ.தவமணி-த.மகேஸ்வரி தம்பதியரின் மகன் த.சதீஷ்பாண்டி ஆவார். இவர் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 11.05.2025 அன்று மாலை த.சதீஷ்பாண்டியும் அவரது நண்பர் ஈஸ்வரன் மகன் ராமர் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்த போது அய்யம்பட்டி (லட்சுமிநாராயணபுரம்) கல்யாண மண்டபம் வளைவில் எதிரே வந்த நத்தம்பட்டியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வட்டிக்காரர் முருகன் மகன் மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் மோதுவது போல் வந்து தடுமாறி கீழே விழுந்துள்ளனர். சம்பவத்தைப் பார்த்த த.சதீஷ்பாண்டி மேற்படி மனோஜ்குமாரை பார்த்து வளைவில் இப்படி வேகமாக வரலாமா என்று சொன்னதற்கு நீங்கள் எந்த ஊரு என்று கேட்டுள்ளனர். அதற்கு த.சதீஷ்பாண்டி பி.பாறைப்பட்டி என்று சொன்னவுடன் சாதியைச் சொல்லியும், மிகவும் அசிங்கமாக திட்டியதுடன் மனோஜ்குமார் தனது கையால் த.சதீஷ்பாண்டியின் மூக்கிலும், வாயிலும் குத்தியுள்ளார். த.சதீஷ்பாண்டிக்கு வாயிலும், மூக்கிலும் இரத்தம் வந்துள்ளது. அதன் பின்னரும் மனோஜ்குமாருடன் வந்த நபர்களும் த.சதீஷ்பாண்டி உடம்பில் மாறி, மாறி எத்தி கீழே தள்ளியுள்ளனர். மேலும் போன் போட்டு மற்ற நபர்களையும் வரவழைத்து மொத்தம் 9 பேர் சேர்ந்து சாதியைச் சொல்லி அடித்ததுடன் கொன்று புதைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதற்கு பயந்து த.சதீஷ்பாண்டி தன்னுடைய பெற்றோரிடம் நடந்த விபரங்களை கூறவில்லை. கடந்த  12.05.2025 அன்று இரவு த.சதீஷ்பாண்டி இரத்த வாந்தி எடுத்தும் உடம்பெல்லாம் வலிக்குது என்று கூறியுள்ளார். என்ன காரணம் என்று பெற்றோர் விசாரித்த போது கடந்த 11.05.2025 அன்று நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். பதறிப்போன பெற்றோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். த.சதீஷ்பாண்டியின் தந்தை செ.தவமணி கடந்த 13.05.2025 அன்று எம்.புதுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து விசாரணை செய்த விருதுநகர் மாவட்டம், எம்.புதுப்பட்டி காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நத்தம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் மனோஜ்குமார் மற்றும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அதே போல் குற்றவாளிகள் கொடுத்த பொய் புகார் மனுவின்படி விருதுநகர் மாவட்டம், எம்.புதுப்பட்டி காவல் துறையினர் கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளின் கீழ் பாதிக்கப்பட்ட த.சதீஷ்பாண்டி, ராமர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட த.சதீஷ்பாண்டி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எம்.புதுப்பட்டி காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் 3 பேர் த.சதீஷ்பாண்டியை நேரில் சந்தித்து நீ சொல்றதெல்லாம் உண்மை கிடையாது ஓடி விடு இல்லையென்றால் உன் மீது கஞ்சா கேஸ் போட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

எனவே, மேற்படி த.சதீஷ்பாண்டி மீது சாதிய வன்மத்துடன் கும்பல் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் குற்றவாளிகள் 9 பேரையும் உடனடியாக கைது செய்திடவும், குற்றவாளிகள் கொடுத்த பதில் பொய் புகார் மனுவின்படி பாதிக்கப்பட்ட த.சதீஷ்பாண்டி உட்பட 3 பேர் மீது கொலை முயற்சி பிரிவு உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதை ரத்து செய்திடவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் எம்.புதுப்பட்டி காவலர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திடவும், வழக்கு விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.