உடையின் பெயரால் சங்பரிவாரம் செய்யும் அடாவடித்தனங்களுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
கர்நாடகத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவிகள் `ஹிஜாப் எனப்படும் உடை அணிந்து வரக்கூடாது என்று கெடுபிடி செய்யப்படுகிறது. அப்படி அணிந்து வரும் மாணவிகளுக்கு எதிராக சங்பரிவாரத்தை சார்ந்த மாணவர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக காவித் துப்பட்டா அணிந்து வருவோம் என்று வம்பு செய்கிறார்கள். விவகாரம் மாநிலம் முழுக்க பரவி சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஆகியுள்ளது.
கல்வி நிறுவனத்திற்கு `ஹிஜாப்’ அணிந்து தனியாக வந்த ஒரு முஸ்லிம் மாணவியிடம் சங்பரிவார கோஷ்டி ஒன்று, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு மிரட்டிய போது, அதற்கு சிறிதும் அஞ்சாமல் அவர்களுக்கு அந்தப் பெண் எதிர்க் குரல் கொடுப்பதும் சமூக ஊடகங்களில் பரவி அங்குள்ள நிலைமையின் தீவிர தன்மையை உணர்த்துவதாக உள்ளது.
உணவு, உடை, காதல், மதம் என்னும் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் ஆர்.எஸ்.எஸ். பாஜக திருக்கூட்டம் உத்தரவு போட்டு வருகிறது. அதன் நோக்கம் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களே என நிறுவுவதாகும். அப்படியாக மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய துடிப்பது ஆகும்.
சங்பரிவாருக்கு பெண் உரிமை காக்கும் நோக்கமெல்லாம் கிடையாது என்பதை சபரிமலை விஷயத்தில் அறிந்தோம். அங்கே இளம் வயது இந்து பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று இப்போதும் சண்டித்தனம் செய்து வருகிறார்கள். இதுதொடர்பான உச்சமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தி வருகிறார்கள். இந்த லட்சணத்தில் பெண்களின் உரிமைகளுக்காக இந்த எதிர்ப்பு என்பது மோசடி வாதமாகும்.
கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களே கூடாது என்றால் சகல மத அடையாளங்களையும் தடை செய்ய வேண்டும். பிற மத அடையாளங்களை அனுமதித்து விட்டு `ஹிஜாப் அணிவதை மட்டுமே தடுப்பது நியாயமாகாது. இந்த தடை முஸ்லிம்கள் மீது சங்பரிவாருக்குள்ள வெறுப்பையும் வன்மத்தையும் காட்டுகிறது. அதன் மூலமாக இவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமல்லாது, முஸ்லிம் பெண்களின் கல்வியையும் பறிக்கப் பார்க்கிறார்கள். எனவே கல்வி நிறுவனங்களில் `ஹிஜாப்’ அணிய தடை என்பதையும் அதன் பெயரில் சங்பரிவாரம் செய்யும் அடாவடித்தனங்களையும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாக கண்டிக்கிறது. இப்படி எந்த தடையும் விதிக்க கூடாது என்றும் இதுதொடர்பாக அராஜகங்களில் இறங்கும் சங்பரிவாரத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில அரசை மேடை வலியுறுத்துகிறது.
இந்த அக்கிரமத்தை கண்டிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென்று வற்புறுத்துகிறது. வேறு ஒரு மாநிலத்தில் நடக்கிற விஷயமாக தமிழக மக்கள் இதை எளிதாக கடந்து போய் விடக்கூடாது. மதவெறி என்பதும் ஒரு மோசமான தொற்றுநோயே. அது தமிழ்நாட்டுக்கு உள்ளும் பரவலாம். ஏற்கனவே புதுச்சேரிக்கும் அது புகுந்துவிட்டது. அங்கும் ஓர் அரசுப் பள்ளியில் `ஹிஜாப்’ அணியக்கூடாது என்று மாணவிகள் மிரட்டப்பட்டு உள்ளனர்.
எனவே தமிழக மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடையின் பெயரால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க நியாய உள்ளம் படைத்த அனைவரும் முன்வர வேண்டுமென்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கேட்டுக்கொள்கிறது.