tamilnadu

img

சொந்த மக்களையே உளவு பார்க்கும் பாஜக அரசுக்கு சிபிஎம் கண்டனம்.....

சென்னை:
சொந்த மக்களையே உளவு பார்க்கும் ஒன்றியபாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூலை 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி,பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜூலை 23 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டா ளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உட்படமுந்நூறுக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் கணினிகள் மற்றும் மொபைல் போன்கள்நீண்ட நாட்களாக ரகசியமாக கண்காணிக்கப் படுவதாகவும், உரையாடல்கள் உட்பட அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுவ தாகவும் அண்மையில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ எனும் அமைப்பு தயாரித்துள்ள பெகாசஸ் எனும் வேவு மென்பொருள் மூலம் இத்தகைய கண்காணிப்பு மற்றும் தகவல் திருட்டு நடைபெற்றுள்ளதாகவும், ஒன்றிய அரசின் ஒப்புதலோடு தான் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அனைத்துத் தரப்பினராலும் வலுவான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள ஒன்றிய அரசு, இத்தகைய உளவு நடவடிக்கைகளில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அரசின் சார்பிலோ, அரசாங்க உளவு அமைப்புகளின் சார்பிலோ யாரையும் கண்காணிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ எனும் அமைப்பு தாங்கள் தயாரித்துள்ள பெகாசஸ் எனும் உளவு செயலியை அரசாங்கங்களைத் தவிர வேறு எந்தவொருதனியார் நிறுவனங்களுக்கு அளிப்பதில்லை என்பது அந்நிறுவனத்தின் கொள்கை முடிவு எனவும், உலகில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அரசாங்கங்களுக்கு தங்களது வேவு மென்பொருளை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. வேவு மென்பொருளை வழங்கும் நிறுவனத்தின் இத்தகைய விளக்கம் ஒன்றிய அரசின் விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக இருப்பதால், உளவு நடவடிக்கைகளில் அரசுக்கு தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்படுவதோடு அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக களவாடப்படுவதாகவும் எழுந்துள்ள முக்கிய குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய அரசு அலட்சியமாக நடந்து கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.   

ஏனெனில் ஏற்கனவே இத்தகைய ஒரு வேவு மென்பொருள் மூலம் அனுப்பப்பட்ட ஆதாரமற்ற கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆகியவற்றை கொண்டே பீமா கோரேகான் வழக்கில் முக்கிய சமூக செயற்பாட்டாளர்களும், எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பெகாசஸ் உளவு குறித்த தகவல்களை மக்களிடம் இருந்து மறைக்கும் ஒன்றிய அரசின் செயல்மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்று என்பதோடு, அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் ஒன்றிணைந்து வலுவாக போராடுகிற சூழ்நிலை உருவாகும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது. கருத்துரிமையின் மீது பாஜக அரசு தொடுக்கும் தாக்குதல்களின் உச்சகட்ட வெளிப்பாடு இது என்பதையும் சுட்டிக்காட்டி, பாஜகவின் இந்த ஒட்டு மொத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற அறைகூவலையும் விடுக்கிறது.மேலும் இப்பிரச்சனை குறித்து விசாரிப்பதற்கு உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து விசாரணை நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.