சு.வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயகப் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் அவையில் பேச முற்பட்ட போது ஆளும் கட்சியினர் அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுந்து பேச முற்பட்ட போது அவரை பேசவிடாமல் ஆளும் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை பேசுமாறு சபாநாயகர் அழைத்தார். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து சபாநாயகர் முன்பு முற்றுகையிட்டு நியாயம் கேட்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்பட 8 எம்.பி.க்கள் இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள்ளேயே எதிர்க்கட்சி தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச விடாமல் அவர்களின் குரல்வளையை நெறித்து உரிமைகளை பறித்துள்ளதானது ஜனநாயகப் படுகொலையாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
ஒன்றிய பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட சக்திகள் வலுவாக கண்டன குரலெழுப்பிட வேண்டுமென்றும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கைகயை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், நாடாளுமன்ற அவையை ஜனநாயகப் பூர்வமாக நடத்திட ஒன்றிய பாஜக முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
