articles

img

வஞ்சத்தின் உச்சத்தில் மோடி அரசு தமிழ்நாடு விவசாயிகளின் கண்டன முழக்கம் - சாமி.நடராஜன்

வஞ்சத்தின் உச்சத்தில்  மோடி அரசு  தமிழ்நாடு விவசாயிகளின் கண்டன முழக்கம்

ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிற்கு 2014-ஆம் ஆண்டு வந்த பாஜக அரசு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்திய விவசாயிக ளுக்குப் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில் மிக முக்கியமானது, நாடு முழுவதும் விவசாய நெருக்கடிகளால் மாண்டு போகும் விவசாயிகளின் தற்கொலைகளை முற்றிலுமாகத் தடுப்போம் என்பதாகும். இதற்கு அடிப்படையான காரணமாக உள்ள வேளாண் விளை பொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார  விலையை வழங்குவோம், இதன் மூலம் விவசாயிக ளின் வருமானம் ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக உயரும் என்றெல்லாம் உறுதியளித்தனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் விவசாய நெருக்கடி மேலும் அதிகரித்து விட்டதோடு, இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோகும் அவலநிலை தொடர்கி றது. இதற்கு அடிப்படையான காரணம் மோடி அரசு பிடிவாதமாகச் செயல்படுத்தி வரும் கார்ப்பரேட் சார்பு வேளாண் கொள்கைகள்தான்.

போராட்டக் களமும் துரோகமும் 2020-இல் விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய விவசா யத்தையும் பெரும் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த விவசாயிகள், தலைநகர் தில்லியில் 13 மாத காலம் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகளை இணைத்து எஸ்.கே.எம் (SKM) என்ற கூட்டமைப்பை உருவாக்கி நீடித்த போராட்டத்தை நடத்தினர். போராட்டக் களத்தில் 726 விவசாயிகள் தங்களின் உயிரைத் தியா கம் செய்து, ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தனர். தற்போது மூன்றாவது முறையாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள மோடி தலைமையிலான அரசு, அந்த மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள வற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியாகப் பிரித்து அமல்படுத்தத் துவங்கியுள்ளது. வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) எம்.எஸ்.சுவாமிநாதன் குழுப் பரிந்துரைப்படி வழங்குவதாகப் பிரதமர் முதல் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் வரை தொடர்ந்து பொய்ப் பிரச்சா ரத்தைச் செய்து வருகின்றனர்.

குறைந்தபட்ச ஆதார விலை சி2+50 நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்தி டும் விளைபொருட்களில் 23 வகையான பயிர்க ளுக்குத் தான் ஒன்றிய அரசு தற்போது வரை விலை யைத் தீர்மானிக்கிறது. இந்த விலையும் கூட 2013-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையான சி2+50 அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் எந்தவிதமான பயிர்களாக இருந்தாலும் அதற்கு ஏற்படும் உற் பத்திச் செலவுகளோடு, ஒன்றரை மடங்கு சேர்த்து  விலை அறிவிக்க வேண்டும். சி2+50 என்பது - விதை, உழவு, பயிர் நடுதல், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து, கூலி, எந்திர வாடகை, குடும்ப உழைப்பு,  எந்திரத் தேய்மானம் இவற்றோடு நிலத்திற்கான வாடகை உட்பட அனைத்தையும் உள்ளடக்கியதாகும். ஆனால் 11 ஆண்டுகாலமாக சி2+50-இன் படி வேளாண் விளைபொருட்களுக்கு விலை அறி விக்காமல், இந்திய விவசாயிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் விலை இழப்பைச் சந்தித்து வருகின்றனர். தற்போது அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்குசட்டப் பாதுகாப்புக் கூட கிடையாது.

எனவே தான் குறைந்தபட்ச ஆதார விலை சி2+50-இன் படி அறிவிக்கப்பட வேண்டும் என்பதையும், இதற்கான மத்திய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். விதை மசோதா 2025:  கார்ப்பரேட் ஆதிக்கம் நாட்டின் வேளாண்மையைக் கைப்பற்ற விதைக ளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டம். அந்தத் திட்டத்திற்கு உதவிடும் வகையில் தான் ஒன்றிய அரசு ‘2025 விதை மசோதாவை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ஒருங்கிணைந்த பல விதைச் சட்டங்கள் உள்ள நிலையில், தற்போது தரமற்ற விதைகளால் விவ சாயம் பாதிப்பதாகச் சொல்லி இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய, மாநில அரசுகளின் கீழ் பல விதை ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தரமான புதிய ரகங்களை உருவாக்குவதற்கு மாறாக, இந்தியாவின் ஒட்டுமொத்த விதைச் சந்தையையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக் கத்தான் இந்த மசோதா பயன்படும். ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களிடம் விதை வாங்கிப் பயிரி டப்பட்ட பி.டி பருத்தி, மக்காச்சோளம் மற்றும் விதை யில்லா காய்கறிகளால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை நாம் அனுபவித்து வருகிறோம். 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் விதை விற்பனை 780 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது 2033-இல் 1900 கோடி டாலராக உயரும் எனத் தெரிகிறது. விதைச் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் பேயர் (23%), கோர்டேவா (19%), சின்ஜென்டா (10%) மற்றும் BASF (4%) என நான்கு பன்னாட்டு கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் 56 சதவீதம் உள்ளது. ஒட்டுமொத்த விதைச் சந்தையை இவர்களிடம் ஒப்ப டைப்பதற்கே 2025 விதை மசோதா பயன்படும்.

இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். மின்சாரத் திருத்தச் சட்டம் 2025: சலுகைகள் பறிபோகும் தில்லி போராட்டத்தின் முக்கியக் கோரிக்கை களில் மின்சாரத் திருத்த மசோதாவும் ஒன்றாகும். விவசாயிகளிடம் கலந்து பேசாமல் இச்சட்டத்தைக் கொண்டு வர மாட்டோம் என ஒன்றிய அரசு அன்று உறுதி அளித்தது. ஆனால் தற்போது மின்சாரத் திருத்த மசோதா 2025-ஐச் சட்டமாக்கிட அரசு துடித்துக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது மின் உற்பத்தி மற்றும் விநியோகம் 52 சதவீதம் தனி யாரிடம் சென்றுவிட்டது. பொதுத்துறை மூலம் கட்டமைக்கப்பட்ட மின் வழித்தடங்களைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஒரு யூனிட் மின்சாரம் கூட விலையில்லாமலும், சலுகைக் கட்ட ணத்திலும் கிடைக்காது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள் மூலம் விவசாயி கள் பயன்படுத்தி வரும் விலையில்லா மின்சாரம் பறிக்கப்படும். 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கான சலுகை கட்டணம் ஆகியவை யும் முற்றிலுமாகப் பறிக்கப்படும். இது உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கான சட்டமே தவிர வேறல்ல. 100 நாள் வேலைச் சட்டம்  மற்றும் கடன் தள்ளுபடி 2004-இல் இடதுசாரிகளின் அழுத்தத்தால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை உறுதிச் சட்டத்தை மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும்

நிதியைக் குறைத்து நீர்த்துப் போகச் செய்தது. தற்போது மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு, ‘விக்சித் பாரத்  - ஜி  ராம் ஜி’ (VB-G RAM G) சட்டம் 2025 எனக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம்  மத அடையாளத்தைப் புகுத்துகின்றனர். 125 நாள் வேலை  எனக் கூறினாலும், பழைய சட்டத்தில் இருந்த வேலை கோரும் உரிமை இப்புதிய சட்டத்தில் மறுக்கப் பட்டுள்ளது. மறுபுறம், விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது எனப் பிரதமர் மோடி யும், நிதியமைச்சரும் கூறிவிட்டனர். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் பெரும் முதலாளிகளின் சுமார் 24 லட்சம் கோடி ரூபாயை வராக்கடனாக அறிவித்துத் தள்ளுபடி செய்துள்ளனர். மேலும், பெரும் நிறுவனங்களுக்கு\

வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியில் 14 லட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்து, தங்களது அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசுதான் எனப் பிரகடனப்படுத்துகின்றனர். இன்று பெருந்திரள் தர்ணா ஒன்றிய அரசின் நவீன தாராளமயக் கொள்கைக ளால் உழைப்பாளி மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்திய விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடை பெறுகின்றன. விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட் டத்தைச் சிதைக்க பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கள் முயற்சிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சில சங்கங்கள் ஒன்றிய அரசின் இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக வலுவான குரல் எழுப்பாமல், மாநில அரசு தான் காரணம் எனச் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து பிப்ரவரி 4- (இன்று) தஞ்சை, மதுரை, விழுப்புரம், திருப்பூர் ஆகிய இடங்களில் மண்டல அளவிலான பெருந்திரள் தர்ணா நடை பெறவுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான விவசா யிகளைப் பங்கேற்கச் செய்வோம்.