states

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

வெறுப்பு 1

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கர்நாடக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பாஜக ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சி வந்தபிறகு, வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அதற்கென்று தனியான விதிகள் இல்லாததால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு தப்பித்து வந்தனர். வெறுப்பு உமிழ்வைத் தடுக்க தனிப்பட்ட சட்டம் தேவை என்று காங்கிரஸ் மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக சக்திகளும் கருத்து தெரிவித்தன. அதன் அடிப்படையிலேயே சட்டமன்றத்தில் மசோதா நிறைவேறியது. அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ள ஆளுநர் கெலாட், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். வெறுப்புப் பிரச்சாரத்திற்கு ஆதரவான நிலையை ஆளுநர் எடுக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

வெறுப்பு 2

சட்டவிரோதமான புல்டோசர் நடவடிக்கைகளை மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் தொடர்வது கவலையளிக்கிறது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. தங்கள் வீடு, ஆலை மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் இடித்து விடும் என்ற அச்சத்தில் கணவனும், மனைவியும் உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். தங்கள் பகுதியில் ஏற்கெனவே, புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடித்ததை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தனைக்கும் இந்த இருவர் மீதும் எந்தவிதமான புகார்களும் இல்லை. இவர்களின் உறவினர் ஒருவர் போக்சோ வழக்கில் சிக்கியிருக்கிறார். அதைக் காரணம் காட்டி, இவர்களின் சொத்துகளை இடிக்கும் திட்டத்தில் மாவட்ட நிர்வாகம் உள்ளது. ஐந்து வினாக்களை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. இத்தகைய இடிப்புகள் கூடாது என்று நீதிமன்றம் சொன்னபிறகும், அது ஏன் தொடர்கிறது என்றும் கேட்டுள்ளது.

வெறுப்பு 3

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி, தாக்குதல்களை இந்துத்துவ அமைப்பினர் நடத்துகிறார்கள். ஆட்சியாளர்களின் ஆதரவால் இந்தத் தாக்குதல்களுக்கு காவல்துறையும் துணைபோகிறது. கரியாபந்த மாவட்டம், துட்கய்யா கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் 6 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இது திடீரென்று நடைபெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அப்பகுதியில் வன்முறை நடக்கிறது. சிறுபான்மையினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். வழக்குகளோ, வன்முறையாளர்களுக்கு எதிராக இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பதிவாகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில், காவல்துறையினரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

வெறுப்பு 4

குஜராத் மாநிலம் பதான் தாலுகா, சந்துரு மனா என்ற கிராமத்தில் ஒரு தலித் குடும்பத் தின் திருமண வரவேற்பு நிகழ்வு தாக்கப் பட்டிருக்கிறது. வரவேற்பு நிகழ்வின்போது பாடல் ஒலிபரப்பக்கூடாது என்று அப்பகுதி யைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வரவேற்பு நிகழ்வுகளில் பாடல் ஒலிபரப்புவது வாடிக் கையானதுதானே என்பதைப் பற்றிக் கவலைப்படாத, ஆதிக்க சாதியினர் தாக்கு தல் நடத்தத் தொடங்கினர். அங்கு விரைந்த காவல்துறையினர் 8 பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு அடுத்து, பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் குஜராத்தில் அதிகமாகியுள்ளன என்று சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள். பட்டியலின மக்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரம் நடப்பதைச் சுட்டிக்காட்டி, இது வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையல்ல. சமூகப் பிரச்சனையா கக் கருதப்பட வேண்டும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.