tamilnadu

img

தொழிலாளர் சட்டங்களை கசடறக் கற்று போதித்தவர் தோழர் வைத்தியநாதன்

சென்னை:
சிஐடியு முதுபெரும் தலைவர் வைத்தியநாதன் மறைவுக்கு தமிழ் நாடு ஏஐடியுசி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து பொதுச் செயலாளர் டி.எம். மூர்த்தி விடுத்துள்ள அறிக்கை.

ஆளுமையும் பேரன்பும்   சலியாத உழைப்பும் கொண்ட பெருமதிப்பிற்குரிய தலைவர் தோழர் கே. வைத்தியநாதன் அவர்கள் இயற்கை எய்தினார். மிக இளம் வயதிலேயே ஏஐடியூசியின் முழுநேர ஊழியராக தனது அர்ப்பணிக் கப்பட்ட வாழ்வை துவக்கிய தோழர் கே வி, சிஐடியு துவக்கப் பட்ட பின்னர் அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். அவரது சம காலத்தவரால் "வைத்தா" என்று மிகவும் செல்லமாக அழைக்கப்பட்டவர். அமைப்புகளை உருக்கு போல கட்டுவதிலும், தொழிலாளர் சட்டங்களை கசடறக் கற்று போதிப்பதிலும், தொழிலாளர் பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகளிலும் தொழிலாளர் துறை முன்பு எடுத்துரைத்து தீர்வு காணும் வகையில் வாதாடுவதிலும் தன்னிகரற்று விளங்கிய தலைவர் அவர்.தோழர் கே.வி. சென்னையில் நடந்த ஒரு விபத்தில் காயமுற்று நடக்க இயலாத நிலைக்கு ஆளானார். அவரை  25 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகத்திலேயே வைத்து சிஐடியு போற்றிப் பாதுகாத்து வந்தது. 

சிறைகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் தமது வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கழித்து, ஓரம் ஒதுங்கிடாமல், இயக்கத்தையே தன் உயிர் மூச்சாய் கொண்டுழைத்த  மூத்த தலைமுறையின் மிச்சமாக நின்ற ஒருசில போராளிகளில் இன்னொருவர் விடைபெற்றுவிட்டார். தோழர் கே.வைத்தியநாதன் அவர்களின் திருப்பெயர் நீடூழி வாழ்க. மறைந்த மதிப்புமிக்க தலைவருக்கு ஏஐடியூசி நெஞ் சார்ந்த அஞ்சலி செலுத்துகிறது. சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.