தோழர் “முரசு “ஆனந்த் காலமானார் தமுஎகச-சிபிஎம் அஞ்சலி
குழித்துறை, ஜன.8 - கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமுஎகச கலைஞர் தோழர் “முரசு” ஆனந்த் காலமானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும் முரசு கலைக்குழுமத்தின் இயக்குனரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மெதுகும்மல் வட்டாரக்குழு உறுப்பினருமான தோழர் முரசு ஆனந்த் (வயது 54) திருவனந்தபுரம் மருத்துவமனையில் காலமானார். தோழர் “முரசு” ஆனந்த் சிறந்த நாடக கலைஞர், மக்கள் பாடகர், நாட்டுப்புற கலைஞர், கவிஞர், பாடல் எழுத்தாளர், நாட்டுப்புறக்கலை மற்றும் நாடக பயிற்சியாளர், பேச்சாளர், சிறந்த இயக்க அமைப்பாளர் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர். தமிழகம் முழுவதும் தமுஎகச கலை இரவு மேடைகளில் முழங்கிய குரல் .கட்சியின் மாநாடுகளுக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் கலைப்பயணத்தை வழி நடத்துபவர் .தன் குடும்பத்தினரையும் சமூக செயல்பாட்டுக்கும் கலைக்கும் பணியாற்ற ஈடுபடுத்தியவர். குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா நடைக்காவு அருகில் ஆலங்கோடு இவரது சொந்த ஊர் ஆகும். தோழர் முரசு ஆனந்த்தின் மனைவி அருள் செல்வி,தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் ஆவார். மகன் மகரந்தன், மகள் மேதினி ஆகியோர் உள்ளனர். தமுஎகச பொதுச்செயலாளர் களப்பிரன் மாநிலப்பொருளாளர் சைதை ஜெ, துணைப்பொதுச் செயலாளர் வெண்புறா, துணைத்தலைவர் பிரளயன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயகாந்தன், மாவட்டத் தலைவர் ஹலீமா, செயலாளர் அருள் மனோ, மாநிலக்குழு உறுப்பினர் விடியல் குமரேசன், மாவட்ட பொருளாளர் மனோகர் ஜஸ்டஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி பாஸ்கரன், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், மூத்த தோழர் நூர்முகமது உட்பட பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணிக்கு நடைபெறு கிறது.
