articles

img

விண்வெளிக் கனவும் வேதியச் சடங்கும்! - ஸ்ரீராமுலு

“2026 ஜனவரி 12, காலை 10.18 மணி. புதிய ஆண்டின் முதல் விண்கலம் நம்பிக்கையின் இறக்கைகளுடன் ஆகாய வெளியில் எழும்பியது. அது வெறும் உலோகக் கட்டமைப்பு அல்ல. ஆயிரக்கணக்கான அறிவியல் மேதைகளின் கடின உழைப்பு. நுணுக்கமான கணக்கீடுகள். நூற்றுக்கணக்கான கோடி ரூபாயின் தொழில்நுட்ப கனவு. அனைத்தும் ஒரே இலக்கை நோக்கி இசைந்திருந்தன. ஆனால் மூன்றாம் கட்டத்தில் செயற்கைக்கோள் தன் பாதையை இழந்து தடுமாறியது. விண்வெளிக் கனவு மண்ணில் சிதறிக் கிடந்தது”.

இதில் இதயத்தை உலுக்கும் முரண்பாடு ஒன்று மறைந்திருக்கிறது. ஏவுதலுக்கு முன்பு திருப்பதியில் சிறப்பு ஆராதனை. ஸ்ரீஹரி கோட்டா வில் விரிவான வழிபாடு. ராக்கெட் மாதிரிகள் தெய்வங்களின் திருவடியில் சமர்ப்பணம்.  ஆனால், விண்வெளியில் அது செல்லுபடி யாகவில்லை. அறிவியலின் விதிகள் வழி பாட்டின் குரலைக் கேட்கவில்லை. இது நமக்கு  என்ன உரைக்கிறது? அறிவியலின் ஆன்மா நம்பிக்கையல்ல, சோதனையும் சான்றுகளும், தரவுகளுமே அதன் உயிர்மூச்சு என்பதாகும். அறிவியலின் அழியாத இதயத் துடிப்பு 21 நூற்றாண்டு அறிவியலின் பொற்காலம். செயற்கை நுண்ணறிவு மனித சிந்தனையின் எல்லைகளை நொடிக்கு நொடி உடைத்துக் கொண்டிருக்கிறது.  மரபணு பொறியியல் நோய்களின் வேர் களைக் களைந்து புதிய நலவாழ்வின் விதை களை விதைக்கிறது. இந்த அறிவுப் புரட்சியின்  நடுவில், இஸ்ரோ உலக அரங்கில் பெருமிதத்து டன் நிமிர்ந்து நிற்கிறது. சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தை தீண்டிய போது, அது வெற்றிக் கொடி மட்டு மல்ல, அறிவுசார் திறன்களின் சான்றாகவும் விளங்கியது. மங்கள்யான் செவ்வாய்க் கிர கத்தை சுற்றியபோது, அது வெறும் செயற் கைக்கோள் அல்ல, நமது கனவுகள் விண்வெளி யில் பறந்தது. இது போன்று ஏராளமான ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்வெளியின் ரகசியங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. இந்த வெற்றிகளின் பின்னணியில் ஒரு நீண்ட  அறிவியல் பரம்பரை உள்ளது. இந்திய விண் வெளி திட்டத்தின் தந்தையாக போற்றப்படும் விக்ரம் சாராபாய் தொடங்கி, சதீஷ் தவான், ஜி. மாதவன் நாயர், கே.சிவன், எஸ். சோமநாத், வி. நாராயணன் என பலரது வழிகாட்டுதலும் அளப்பரிய பணியும் அஸ்திவாரக் கற்கள். ஆனால் இந்த அறிவியல் வெற்றிகளின் நடு வில், ஓர் ஆழமான முரண்பாடு மௌனமாக மறைந்துள்ளது. ஐசக் நியூட்டன் ஈர்ப்பு விசையைக் கண்ட போது கோவில் மணியோசையை நாட வில்லை. மேரி கியூரி கதிரியக்கத்தின் ரகசியங்  களை அலசியபோது மந்திரங்களை முணு முணுக்கவில்லை. உயிரையே பணயம் வைத்தார். இரண்டு நோபல் பரிசுகளை வென்  றார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட் பாட்டை வடிவமைத்த போது ஜோதிடத்தின் கத வைத் தட்டவில்லை.  மாற்றத்தின் நிழல்கள் தொடக்க காலத்தில், சில அறிவியலாளர்கள் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு சென்றனர்.  அது, தனிப்பட்ட நம்பிக்கை. அவர் எந்த  மதத்தையும் பின்பற்றலாம், எந்தக் கடவுளை யும் வழிபடலாம். ஆனால் 2014க்குப் பிறகு, அதி காரப்பூர்வமான, பகட்டான கோலாகலங்களாக அவை மாறியுள்ளன. திருப்பதியில் ஆராதனை. சூளூர்பேட்டை செங்கலம்மா, பரமேஸ்வரி அம்மன் கோவில்  களில் சிறப்பு யாகம். விண்வெளி மையத்தி லேயே பூஜை. ஊடகங்கள் இதை பெருமிதத்து டன் பறைசாற்றுகின்றன. செய்தித் தாள்களும் முதற்பக்க செய்தியாக வெளியிடுகின்றன. தொலைக்காட்சி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இது வெறும் மத நம்பிக்கையா? அல்லது ஒரு  குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் பகுதியா?  இதன் பின்னால் மறைந்திருக்கும் நோக்கம் என்ன? இந்தக் கேள்விகள் மனதை உறுத்து கின்றன.  அறிவியல் என்ற பெயரில் மூடநம்பிக்கை யை நியாயப்படுத்துவது, அறிவியலுக்கும் சமூ கத்துக்கும் நேர்மையான செயலாகும். புள்ளி விவரங்கள் பேசும் உண்மை இஸ்ரோவின் வரலாற்று நூலில் 104 ஏவு தல்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 88 வெற்றி கள், 5 பகுதி வெற்றிகள், 11 தோல்விகள். இந்தப்  புள்ளி விவரங்கள் வெறும் எண்கள் அல்ல. உண்  மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இதயத்தை உலுக்குவது, 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்எல்வி-எஃப்09 தோல்வியுற்றது. அதற்கு முன்பு கோவில் வழிபாடு நடந்தது. 2019ஆம் ஆண்டு  சந்திரயான்-2 லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில்  நொறுங்கியது. அதற்கும் முன்பும் பூஜை  

முன் பக்கத் தொடர்ச்சி ஆராதனைகள் நடத்தப்பட்டன. எல்லா சடங்குகளும் அரங்கேறின. ஆனால், விண்வெளி இரக்கம் காட்ட வில்லை. மறுபுறம், 2026ஆம் ஆண்டு ஜிஎஸ்எல்வி தன் பாதை யில் தடுமாறியது. இதற்கும் திருப்பதியில் தரிசனம், சிறப்பு பூஜை, மத சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அறிவியலின் விதிகள் மாறவில்லை. இந்த புள்ளி விவரங்கள் தெளிவாக ஒன்றைச் சொல்கின்றன. கோவில் மணியோசைக்கும் ராக்கெட் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வெற்றி கள் அறிவியல் திறமையின் கனி, துல்லியமான கணக்கீடு களின் பலன், சரியான பொறியியலின் விளைவு.  தோல்விகள் தொழில் நுட்பக் குறைபாடுகளின் விளைவு, சில நேரங்களில் மனிதத் தவறுகளின் பயன்,  சில நேரங்களில் கணிக்க முடியாத காரணங்களின் விளைவு. அவ்வளவுதான். இதில் தெய்வீக தலையீடு என்ற கருத்துக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. உலகளாவிய பார்வையில் ஒரு ஒப்பீடு உலகத் தரம் வாய்ந்த விண்வெளி நிறுவனங்களை நாம் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமெரிக்காவின் நாசா (NASA) தேவாலய வழிபாட்டை விளம்பரப்படுத்து வதில்லை. அறிவியலை மட்டுமே முன்னிறுத்துகிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) பல நாடுகளின் கூட்டமைப்பு. அங்கு பல மதங்கள் இருந்தா லும், அவர்கள் மதச் சடங்குகளை நடத்துவதில்லை.  ரஷ்யாவின் ரோஸ்காஸ்மாஸ் (Roscosmos) நீண்ட விண்வெளி வரலாறு கொண்டது. அவர்கள் பூஜை களை பகட்டாக காட்சிப்படுத்துவதில்லை.  ஜப்பானின் ஜக்ஸா (JAXA) அதிநவீன தொழில்  நுட்பத்துடன் விண்வெளி ஆராய்ச்சி செய்கிறது. அவர்  கள் அதிகாரப்பூர்வ வழிபாடுகளை மேற்கொள்வ தில்லை.  சீனாவின் விண்வெளி நிறுவனம் (CNSA) உலகின்  மூன்றாவது பெரிய விண்வெளி சக்தியாக வளர்ந்துள்  ளது. அவர்கள் கோவில் சடங்குகளை நடத்துவ தில்லை. அவ்வளவு ஏன்? எலான் மஸ்க்கின் தனியாருக்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தேவாலயத்தில் பூஜை செய்வதைப் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டா?. அறிவியலை அறிவியலாகவே அணுகுகின்றனர். மதம் தனிப்பட்ட விஷயமாக வைத்திருக்கிறார்கள். நிறுவனம் மதச்சார்பற்றதாக, அறிவியல்ப்பூர்வமாக செயல்படுகிறது.  மன அமைதியா? மூடநம்பிக்கையா?  சிலர் வாதிடுவார்கள், அறிவியலாளர்கள் மிகுந்த  மன அழுத்தத்தில் உழைக்கிறார்கள். பதற்றம் அவர்களை வாட்டுகிறது. இதனால் மத நடை முறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று. இதை ஆழமாக  சிந்தித்தால் பல கேள்விகள் எழுகின்றன.  மன அமைதிக்கு கோவிலுக்கு செல்வது மட்டுமே  வழியா? இல்லை. தொழில்சார் உளவியல் ஆலோ சனை, குழு உரையாடல்கள் என பல அறிவியல்ப்பூர்வ முறைகள் உள்ளன. இவை மதம் சாராதவை, அறி வியல்ப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இஸ்ரோ என்ற அரசு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிப்பது சரியா? என்றால் இல்லை. இந்தியா மதச்சார்பற்ற நாடு. இது போன்ற நட வடிக்கைகள் நமது சட்டத்தின் அடிப்படைக் கட்ட மைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. மேலும், சமூ கத்திற்கு மிகவும் தவறான செய்தியை அனுப்புகிறது.  குழந்தைகளும் இளைஞர்களும் இஸ்ரோவை முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். விஞ்ஞானி ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அவர்கள் தங்கள் ஹீரோக்களான அறிவியலாளர்கள் கடைசிக் கட்டத்தில் கோவிலை நம்புவதைப் பார்க்கும்போது, அவர்கள் மனதில் என்ன நிகழும்? ‘அறிவியல் மட்டும் போதாது, வேறு சக்தியின் உதவி தேவை’ என்ற தவறான கருத்து உருவாகும். இது  எதிர்கால அறிவியல் மனப்பான்மைக்கு ஆரோக்கிய மானதல்ல. இது அறிவியல் கல்வியின் அடிப்படை யையே சிதைக்கும் ஆபத்தான போக்கு. அரசியலும் அறிவியலும் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அரசியல் சூழல் கணிசமாக மாறியுள்ளது. இந்துத்துவக் கருத்தி யல் பல்வேறு துறைகளில் ஊடுருவி வருகிறது. வர லாறு மாற்றி எழுதப்படுகிறது. அறிவியல் நிறுவனங்க ளில் மதச் சடங்குகள் பெருகுகின்றன. பண்டைய இந்திய ‘விஞ்ஞானம்’ என்ற பெயரில்  புராணக் கதைகள் உண்மைகளாக திணிக்கப்படு கின்றன. பிளாஸ்டிக் சர்ஜரி வேதகாலத்திலிருந்து இருந்த தாகச் சொல்லப்படுகிறது. அணு ஆயுதங்கள் மகா பாரதத்தில் பயன்படுத்தப்பட்டதாக வாதிடப்படுகிறது. இத்தகைய சிந்தனைகளை அதிகாரப்பூர்வ கல்வித் திட்டங்களில் நுழைக்க முயற்சிக்கப்படுகிறது. அறிவியல் என்பது உலகளாவியது. எல்லைகளைத் தாண்டியது. மதம் சாராதது. மொழி சாராதது. சாதி, இனம், நிறம் பாராதது. அறிவியலை மதத்துடன் கலக்கும்போது, அதன் உலகளாவிய தன்மை சிதைக்கப்படுகிறது.  இன்றைய தேவை அறிவுசார் துணிவு இஸ்ரோவின் இன்றைய தோல்வி நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத் தருகிறது. கோவில் பூஜைகள் ராக்கெட்டுகளைக் காப்பாற்றவில்லை. மந்திரங்கள் செயற்கைக் கோள்களின் பாதையை திருத்தவில்லை. ஆராதனைகள் தொழில்நுட்பக் குறை பாடுகளை சரி செய்யவில்லை.  அறிவியல் திறமையே வெற்றியைத் தரும். தொழில்நுட்பக் குறைபாடுகளே தோல்விகளை ஏற்படுத்தும். இந்தியா அறிவியலில் உலகத் தலைமை யாக வேண்டுமானால், நமக்குத் தேவை அறிவுசார் துணிவு. நமது அறிவியலாளர்கள் மிகவும் திறமையான வர்கள். அவர்களது அர்ப்பணிப்பு வியக்கத்தக்கது. கடின உழைப்பு பாராட்டுக்குரியது. அவர்களது சாதனை கள் நம் அனைவரையும் பெருமைப்பட வைக்கின்றன. அதே நேரத்தில், நவீன அறிவியல் உபகரணங்களை வைத்துக் கொண்டு பழமைவாதச் சிந்தனைகளுடன் செயல்படுவது ஒரு ஆழமான முரண்பாடு. அறிவியலை அறிவியலாகவே அணுகுவோம்.  மூடநம்பிக்கையை அறவே தவிர்ப்போம். நிறுவ னங்களை மதச்சார்பற்றதாக செயல்படவிடுவோம். அப்போதுதான் உண்மையான அறிவியல் முன்னேற்றம் சாத்தியமாகும்.  இக்கட்டுரை இஸ்ரோவின் அறிவியலாளர்களின் திறமையையோ அவர்களது அர்ப்பணிப்பையோ குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக, அறிவியலும் மூடநம்பிக்கையும் கலப்பதால் ஏற்படும் சமூகத் தாக் கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதையும் உணர்த்துவதேயாகும்.