tamilnadu

கல்லூரி மாணவி கொலை: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை, மே 15-கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பவழங்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவதில் காவல்துறை துளிக்கூட அக்கறை காட்டவில்லை. அந்த மாணவியின் காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், இந்த கொலையில் தனக்கு சம்பந்தமே இல்லை என்று கூறியுள்ளதால் காவல்துறை மீதான சந்தேகம் வலுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில், அந்த மாணவியின் தந்தை சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கருவேப்பிலங் குறிச்சி காவல்துறையினர், குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், காவல் துறை விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.எனவே வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தனது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.