சென்னை:
விருப்பத் தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுக்குப் பின், கல்லூரி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து விளக்கமளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.அவரது மனுவில், ''கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வை நடத்தலாம். தற்போது, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. இறுதித் தேர்வு எழுதாமல் அவர்களை மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்க அனுமதிப்பது முறையாக இருக்காது.
சராசரி மாணவர்கள், அரசின் இந்த முடிவை வரவேற்கலாம். நன்றாகப் படிக்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று, தங்கள் திறமையை நிரூபிக்க, தேர்வு எழுதவே விரும்புவர். அவர்களுக்காகப் பள்ளிக் கல்வித்துறை தேர்வு நடத்த வேண்டும்.தமிழக அரசு உடனடியாக, கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்து, யூஜிசி, மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் கவுன்சில், ஏஐசிடிஇ மற்றும் பார் கவுன்சில் உடன் கலந்து ஆலோசித்து தற்போது 12ஆம் வகுப்பு பயில்பவர்களுக்குத் தேர்வை ரத்து செய்யாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கைக் கடந்த முறை விசாரித்த உயர்நீதிமன்றம், பள்ளிக் கல்வித்துறை எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் செவ்வாயன்று ஜூன் 29 மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்த விவகாரத்தில், மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை குறித்தும், அதை ஏற்காத மாணவர்களுக்குத் தேர்வு நடத் தப்படும் எனவும், உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், ஜூலை 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.இதையடுத்து, இது சம்பந்தமாக விளக்கமளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.